கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கம்,வெள்ளி நகை கொள்ளை
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஸ்ரீராம் கார்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் 49 சவரன் தங்க நகை, 500 கிராம் வெள்ளி நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. தாயின் சிகிச்சைக்காக கேரளா சென்ற போது மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஸ்ரீராம் கார்டன் இரண்டாவது தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 30) - ஹேம லக்ஷ்மி (26) தம்பதியர். கோழி இறைச்சி கடை நடத்தி வரும் கார்த்திக் கடந்த ஓராண்டுக்கு முன்னர் இப்பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார்.
இந்த நிலையில் கார்த்திக்கின் தாயார் லட்சுமி (வயது60) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவரது சிகிச்சைக்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள இவரது தங்கை அலமேலு என்பவரது வீட்டில் தங்கியபடி தாய் லட்சுமிக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இதனால் கடந்த மூன்று மாதங்களாக புதிதாக வாங்கப்பட்ட வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது.திடீரென நேற்று வீடு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சை குறித்து விசாரிக்க சென்றபோது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், தனியாக இருந்த வீட்டை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த 49 சவரன் தங்க நகை, 500 கிராம் வெள்ளி நகை மற்றும் சுமார் 1 கிலோ எடை கொண்ட வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றது உறுதி செய்யப்பட்டது.
மேலும் இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.