மீஞ்சூர் அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் அக்காள்-தம்பி உயிரிழப்பு
மீஞ்சூர் அருகே சொகுசு கார் டிராக்டர் மீது மோதிய விபத்தில் அக்காள் தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் டிராக்டர் மீது சொகுசு கார் மோதி தலை குப்புற கவிழ்ந்த விபத்தில் மகள், மகன் பலியானார்கள். தந்தை, தாய், டிராக்டர் ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்த சண்முகம் - மகேஸ்வரி தம்பதியினர் கடை நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் கவி வர்ஷா ( வயது 18) தனியார் கல்லூரியில் இளங்கலை சட்ட படிப்பும், மகன் கவி வர்ஷன் ( வயது 14) தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பும் படித்து வந்தனர். பொங்கல் பண்டிகைக்காக இவர்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று விட்டு இன்று மீண்டும் மீஞ்சூருக்கு திரும்பினர். காரை மகேஸ்வரி ஓட்டி வந்துள்ளார்.
மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் கும்மனூர் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதிய விபத்தில் கார் தலை குப்புற கவிழ்ந்து அப்பளம் போல நொறுங்கியது. மேலும் டிராக்டர் சாலை மேம்பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்தது. கார் பல முறை சுழன்று தலை குப்புற கவிழ்ந்ததில் மகள் கவி வர்ஷினி காரில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மகன் கவி வர்ஷன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரும், டிராக்டரும் மோதிய விபத்தில் மகள், மகன் உயிரிழந்த நிலையில் தந்தை சண்முகம், தாய் மகேஸ்வரி, டிராக்டர் ஓட்டுநர் சந்தோஷ் ஆகிய மூவரும் படுகாயங்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய போது விபத்தில் மகள், மகன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.