கடன் கிடைக்காத விரக்தியில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற பொறியாளர் கைது

கடன் கிடைக்காத விரக்தியில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-12-21 11:03 GMT

கோவை ரத்தினபுரி அருகே தனியார் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை டிக்க முயன்ற பொறியாளரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

வங்கியில் கடன்கேட்டு பலரும் அலைகிறார்கள். ஆனால் கடன் என்னவோ, யார், அதிகமான மாத சம்பளம் வாங்குகிறார்களோ, அதாவது யாரால் கடனை திருப்பி தரமுடியமோ அவர்களுக்குத்தான் கடனை தேடி தேடி வங்கிகள் தருகின்றன. அதேநேரம் கடன் கிடைக்காத பலர், விரக்தியில் இருக்கிறார்கள். சில நேரங்களில் தவறான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் தான் கோவையில் நடந்துள்ளது.

கோவை ரத்தினபுரி அருகே லட்சுமிபுரத்தில் தனியார் வங்கியின் கிளை ஒன்று செயல்படுகிறது. இந்த தனியார் வங்கியின் ஷட்டரில் உள்ள பூட்டை உடைத்து மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே சென்றுள்ளார். வேகமாக உள்ளே போனவர், வங்கியின் லாக்கரை உடைக்க கடுமையாக முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த மர்ம நபரால் லாக்கரை உடைக்கவே முடியவில்லை. இதனால் விரக்தியுடன் போய்விட்டார். இதன் காரணமாக லாக்கரில் இருந்த பணம்-நகைகள் தப்பின.

இந்த கொள்ளை முயற்சி குறித்து வங்கி நிர்வாகம் சார்பில் கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ரத்தினபுரி போலீசார், அந்த மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படையும் அமைத்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தினர். தனியார் வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்த போது, ஒரு நபர் மட்டும் அந்த பகுதி வழியாக வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்ததில் கோவை நியூ சித்தாபுதூரை சேர்ந்த என்ஜினீயர் மரிய அமுதன் சவரிமுத்து(வயது 32) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து தீவிரமாக விசாரித்தார்கள்.

அப்போது சவரிமுத்து, தனியார் வங்கிக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததை போலீசாரிடம் விசாரணையின்போது ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர். சவரிமுத்து அளித்த வாக்குமூலத்தை போலீசார் தெரிவித்தனர் அதன்படி, ஏற்கனவே வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் மரிய அமுதன் சவரிமுத்து கைதாகி உள்ளார். சவரிமுத்து கோவை காந்திபுரம் ஜி.பி. சிக்னல் அருகே கணினி மையம் நடத்தி வருகிறார். சவரிமுத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொள்ளை முயற்சி நடந்த இதே வங்கியில் ரூ.2 லட்சம் கடன் கேட்டிருக்கிறார். என்ன தேவைக்காக என்று வங்கி ஊழியர்கள் கேட்டபோது, மற்றொரு தனியார் வங்கியில் எனது நகையை வைத்து கடன் வாங்கி உள்ளேன். அதை மீட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

உடனே வங்கி மேலாளர், மரிய அமுதன் சவரிமுத்துவை அழைத்துக்கொண்டு, அவர் நகையை அடமானம் வைத்துள்ள வங்கிக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வங்கியின் மேலாளர், அவர் அடகு வைத்த நகை திருட்டு நகை, அதை போலீசார் வாங்கி சென்று விட்டார்கள். எனவே அந்த நபரை நம்பி கடன் கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளாராம். இதையடுத்து மரிய அமுதன் சவரிமுத்துவுக்கு அந்த தனியார் வங்கி கடன் தர மறுத்துவிட்டது. ஆனாலும் விடாமல் சவரிமுத்து பலமுறை அலைந்து கடன் கேட்டாராம். ஆனால் வங்கி நிர்வாகமோ கடன் தரவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த மரிய அமுதன் சவரிமுத்து, தனக்கு கடன் கொடுக்காத வங்கிக்குள் புகுந்து பணம்-நகையை கொள்ளையடித்து வங்கி அதிகாரிகளை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். அதற்கான நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில் வங்கியை இடமாற்றம் செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகள் நடந்து வந்திருக்கிறது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அவர், கடந்த 16-ந் தேதி இரவு தனது திட்டத்தை அரங்கேற்றம் செய்ய முடிவு செய்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று மாலையில் ஊழியர்கள் வங்கியின் ஷட்டரை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்கள்.' நள்ளிரவு ஷட்டரில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே சென்ற மரிய அமுதன் சவரிமுத்து நகை, பணம் இருக்கிறதா என்று தேடி இருக்கிறார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. பின்னர் வங்கி லாக்கரை உடைக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த சவரிமுத்து, வேறு வழியின்றி வெறும் கையுடன் வங்கியைவிட்டு வெளியேற முடிவு செய்தார்.

ஆனால் வங்கிக்குள் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதால், அதில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்பதால், அந்த காட்சிகள் பதிவான ஹார்டு டிஸ்கை கணினியில் இருந்து கழற்றி எடுத்து சென்றுள்ளார். ஆனால் வெளிப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News