தளபதி 66 என்று தொடங்கிய விஜய்யின் 'வாரிசு' படம் ரூ.67 கோடிக்கு விற்பனை..!
நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்துக்கான தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தள ஒளிபரப்பு வியாபாரம் முடிந்தது.
நடிகர் விஜய், 'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு, நடித்துவரும் படம் ' வாரிசு'. இப்படம் தொடங்கியபோது டைட்டில் வைக்கப்படாததால் 'தளபதி 66' என்ற பெயரில் பூஜை போட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. படத்தை தெலுங்குப் படவுலகின் முன்னணி இயக்குநரான வம்சி பைடப்பள்ளி இயக்க, நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இந்தநிலையில், நடிகர் விஜய் பிறந்தநாளன்று படத்துக்கு 'வாரிசு' என்ற பெயரைச் சூட்டி டைட்டிலும் போஸ்டரும் வெளியிடப்பட்டது. படம் அடுத்த ஆண்டு(2023) பொங்கலுக்கு திரைக்கு வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் படத்தின் திரையரங்க வெளியீட்டு வியாபாரம் முடிந்த பின்னரே, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி எனும் இணயத்தள ஒளிபரப்பு வியாபாரம் பேசி முடிக்கப்படும். ஆனால், விஜய்யின் 'வாரிசு' படத்துக்கான தொலைக்காட்சி, ஓடிடி-க்கான வியாபாரம் முன்னதாகவே பேசி முடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விஜய்யின் 66வது படமான 'வாரிசு' 67 கோடிக்கு தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்டுள்ளது. அதேபோல், ஓடிடி தளத்தின் ஒளிபரப்பு உரிமை 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளுக்கானதாகும் என தயாரிப்புத் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
'வாரிசு' படத்தின் நான்கு மொழிகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனமும் அதே நான்கு மொழிகளுக்கான இணையத்தள உரிமையை அமேசான் நிறுவனமும் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.