வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் திடீர் மரணம்: திரையுலகம் அதிர்ச்சி
நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது;
பீட்டர் பாலுடன் வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மஞ்சுளா ஆகியோரின் மகள் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு சில படங்களில் நடித்து வந்த வனிதா, திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதிலிருந்து விலகினார். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார்.
இதன்பின், 2007ம் ஆண்டு ஆனந்த் ஜெயராமனை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் மன வருத்தம் காரணமாக கடந்த 2012 அவரையும் பிரிந்தார்.
குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் இருந்த வனிதாவிஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அதிரடியாக பேசி போட்டியாளர்களிடையே சண்டையிட்டார். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். இதையடுத்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கிய போது, பீட்டர் பாலுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில்,வனிதா இவரை திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையாகி விவாதத்திற்குள்ளானது.
திருமணமான கொஞ்ச நாட்களிலேயே வனிதா குடும்பத்தோடு கோவா சென்றிருந்தபோது பீட்டர் பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து மருத்துவமனையில் சேர்த்து அவரை கவனித்து வந்தார். பின் உடல்நிலை சரியான போதும் பீட்டர் பால் குடியை நிறுத்தாமல் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்ததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். திருமணத்திற்கு முன்னர் பீட்டர் பாலுக்கு அதிகப்படியான குடிப்பழக்கம் இருந்துள்ளது. திருமணத்திற்கு பின் குடிக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால், என்னை ஏமாற்றி விட்டார் என்று வனிதா கூறி இருந்தார்.
இந்நிலையில், கடந்த சில மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பீட்டர் பால் இன்று உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. பீட்டர் பாலுக்கு இருந்த குடி பழக்கமே இவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.