அஜித்தின் துணிவு பட முதல் காட்சி ரத்து: ரகளையில் ரசிகர்கள்
நடிகர் அஜித்தின் `துணிவு' மற்றும் நடிகர் விஜயின் 'வாரிசு' ஆகிய படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகளை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு;
பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் என்றாலே முதலில் ரசிகர்களால் பார்க்கப்படுவது ஸ்பெஷல் ஷோ உள்ளதா என்று தான். அப்படி அஜித்தின் துணிவு படத்திற்கு அதிகாலை 1 மணி ஷோ ஏற்பாடு செய்ய ரசிகர்கள் தலைகால் புரியாத சந்தோஷத்தில் இருந்தார்கள்.
ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது, துணிவு திரைப்பபடத்தின் முதல்நாள் முதல் காட்சி முடிந்துவிட்டது, ரசிகர்கள் அனைவருமே படு சந்தோஷத்தில் உள்ளார்கள். பொதுவாக எந்த படமாக இருந்தாலும் இரண்டு விதமான கருத்துக்கள் வந்து கொண்டிருக்கும், அப்படி தான் துணிவு படத்திற்கும் வந்துகொண்டிருக்கிறது.
ஆனால் அஜித்தின் துணிவு படத்திற்கான அதிகாலை 1 மணி காட்சிகள் சில இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் திரைப்படம் திரையிடப்படும் என அறிவித்திருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் இரவு 10 மணி முதலே தியேட்டர் முன்பு குவிந்து ஆட்டம்பாட்டம், பால் அபிஷேகம் மற்றும் குத்தாட்டம் போட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தியேட்டர் நிர்வாகம் சார்பில் திடீரென அஜித் நடித்த துணிவு படத்தின் இரவு ஒரு மணி காட்சி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகத்தால் ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஒரு மணி காட்சிக்கு பதிலாக விடியற்காலை 4 மணிக்கு இந்த காட்சி ஒளிபரப்பாகும் என திரையரங்கு நிர்வாகம் கூறியது.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கம் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணாடி உடைக்கப்பட்டதால் ரசிகர்கள் ஓட துவங்கினர். இது குறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அந்த தியேட்டர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் திண்டுக்கல், தென்காசி போன்ற இடங்களில் முதல் காட்சி ரத்தாகி இருக்கிறது.
இதனிடையே, வரும் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் திரையரங்குகளில் துணிவு, வாரிசு படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு திடீரென அறிவித்து இருப்பது இரண்டு ரசிகர்களுக்கும் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் இணை ஆணையர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ஜனவரி 13, 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மற்றும் 5 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. திரையரங்கு நுழைவு வாயில்களில் பெரிய கட்அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். மேலும், கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.