அமர்க்களமாய் வெளியாகியது துணிவு பட டிரைலர்.. அஜித் ரசிகர்கள் உற்சாகம்...

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு படத்தின் டிரைலர் இன்று வெளியாகி எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.;

Update: 2022-12-31 15:16 GMT

துணிவு படத்தில் நடிகர் அஜித்குமார்.

நடிகர் அஜித்குமார் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் துணிவு. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு சொந்தமான ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள துணிவு படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான ரெட் ஜெயன் ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழக முழுவதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


துணிவு படத்தில் அஜித்குமாருடன் மஞ்சுவாரியர், சமுத்திரகனி, அஜய், பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பிரேம் உள்ளிட்டோரும் நடித்து உள்ளனர். அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய இரண்டு படங்களை இயக்கிய வினோத் மூன்றாவது முறையாக தற்போது அஜித்குமாருடன் துணிவு படத்தில் இணைந்துள்ளார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னணி இசையில் முத்திரை பதிக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அவரது இசையமைப்பில், அனிருத் பாடிய சில்லா.. சில்லா.. என்ற பாடல் வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகியது. மேலும், காசேதான் கடவுளடா .. பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் துணிவு படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணி அளவில் வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ள துணிவு படத்தின் டிரைலரை வெளியான ஒரு மணி நேரத்தில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர். ஜீ ஸ்டுடியோஸ் இணையதளத்தில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 27 லட்சம் பேர் பார்த்து உள்ளனர். இது புதிய சாதனையாக கருதப்படுகிறது.


துணிவு படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் பல காட்சிகள் ட்ரைலரில் இடம் பெற்றுள்ளன. தொடக்கத்தில், நடிகர் அஜித்குமார் கையில் துப்பாக்கியுடன் வந்து அமர்க்களப்படுத்துகிறார். முதல் காட்சியில் துப்பாக்கிகளும் ஒரு வங்கியின் கட்டிடமும் காட்டப்படுகிறது.

அஜித்குமார் கண்விழித்து பார்ப்பது போல் தொடங்கும் காட்சியில், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறாயே வெட்கமாக இல்லையா? என வங்கி அதிகாரி எழுப்பும் கேள்விக்கு, அஜித் தனது முகமூடியை திறந்தபடி, இல்லை.. என்று சிரித்துக் கொண்டே கூறும் காட்சி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உள்ளது. மேலும், போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். மஞ்சு வாரியார் வரும் காட்சிகள் பில்லா படத்தில் வரும் நயன்தாராவை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ளது.

வழக்கமாக பஞ்ச் வசனம் பேசும் நடிகர் அஜித்குமார், இந்த படத்தில் சிரித்தபடி என்னை மாதிரி ஒரு அயோக்கியன் மேலே கையை வைக்கலாமா என கேள்வி எழுப்ப படி மிரட்டுகிறார். டிரைலரில் உள்ள சில காட்சிகள் மங்காத்தா படத்தில் அஜித் நடித்த நெகட்டிவ் ரோலை ஞாபகப்படுத்துகின்றன. ஆங்கில புத்தாண்டு பரிசாக துணிவு பட டிரைலர் வெளியாகி உள்ளதாக அஜித் ரசிகர்கள் இரட்டை கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News