'இது சினிமாய்யா' என்று சொல்ல ஒரு 'சினிமா பைத்தியம்'

Cinema Paithiyam-சினிமா கொட்டகை

Update: 2021-04-28 12:21 GMT

சினிமாப் பைத்தியம் பட போஸ்டர் 

நிழலின் நிஜத்தை காட்டிய 'சினிமா பைத்தியம்'

Cinema Paithiyam-இன்றைக்கும் சினிமா மீதான மோகம் சிறிதளவும் குறைந்தபாடில்லை. இன்றும் சினிமாவில் வரும் ஹீரோவை உண்மை என்று நம்பி பல இளைஞர்களும், இளம் பெண்களும் வாழ்க்கையைத் தொலைக்கும் காட்சிகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. ஹீரோவின் ரசிகர்கள் என்ற பெயரில், கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, அவரையே தங்களை காப்பாற்ற வந்த கடவுள் போல நினைப்பது, அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று போஸ்டர் ஒட்டுவது, உண்ணாவிரதம் இருப்பது என்று பல பைத்தியக்காரத்தனங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளை மதிக்காமல் அவர்கள் வெளியே வரும்போது அவர்களின் அனுமதி பெறாமல் செல்ஃபி எடுக்க முயல்வது, மருத்துவமனைக்கு வரும்போது கூட அவர்களுக்கு தெரியாமல் படமெடுப்பது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நடிப்பு என்பது அவர்களின் தொழில். திரையில் வருவது அனைத்தும் நிஜமல்ல. திரையில் எதிரும், புதிருமாக இருப்பவர்கள் நிஜத்தில் நண்பர்களாக இருப்பார்கள். திரையில் வில்லனாக வருபவர் நிஜத்தில் மிகவும் நல்லவராக இருப்பார். இதற்கெல்லாம் உதாரணமாக தமிழ் திரையில் பல காலம் கோலோச்சிய, இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவராக உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியாரை கூறலாம்.


இவரும். எம்.ஜிஆரும் எப்போதும் திரையில் வில்லனாகவும், ஹீரோவாகவும்தான் தோன்றுவார்கள். ஆனால், நிஜத்தில் இவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்ட நீண்டகால நண்பர்கள். அதேபோல திரையில் எப்போதும் வில்லனாக தோற்றமளிக்கும் நம்பியார், நிஜ உலகில் குருசாமி என்று போற்றப்படும், எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு நல்ல மனிதர். தற்போது திரையில் வில்லனாக அறிமுகமான சோனுசூட் அவருடைய உதவிகளின் மூலம் இன்று மாஸ் ஹீரோவாக மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார். திரையில் மக்களை காக்க ஆபத்பாந்தவனாக வருபவர்கள், நரம்பு புடைக்க பேசுபவர்கள் நிஜத்தில் மக்களுக்கு ஒரு பிரச்னை என்று வரும் போது கருத்து கூட கூற தயங்குகின்றனர். ஆனால், இன்றும் இவர்களை ஹீரோக்கள் என்று மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. நிழல் வேறு, நிஜம் வேறு என்று புரியாத பல இளைஞர்கள் இன்றும் உள்ளனர்.

அப்போதே சினிமாவை பார்த்து அதில் நடிக்கவேண்டும், புகழ்பெற வேண்டும் என்றும், சினிமா நடிகர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் பலர் சென்னைக்கு வந்து சீரழிந்த கதைகள் உண்டு. அந்த உண்மைகளை அடிப்படையாக வைத்தும், மக்களிடையே வெள்ளித்திரை வேறு, திரைக்கு பின்னால் உள்ள உலகம் வேறு என்று மக்களுக்கு உணர்த்துவதற்கு எடுத்த படம்தான் 'சினிமா பைத்தியம்' எனும் படம்.

1975 ல் முக்தா சீனிவாசன் இயக்கிய இந்த படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா, கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை ஏ. எல். சீனிவாசன் தனது ஏ.எல்.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்தார். இது குட்டி என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.


நடிகை ஜெயச்சித்ரா பின்னர் ஒரு நேர்காணலில் இந்த படம் சென்னையில் உள்ள தேவி-ஸ்ரீதேவி வளாகத்தில் 100 நாட்கள் ஓடியதாகவும், அந்த தியேட்டர் வளாகத்தில் இவ்வளவு காலம் ஓடிய முதல் தமிழ் கருப்பு-வெள்ளை படம் இதுதான் என்றும் கூறினார்.

இந்த படத்தில், ஜெயசித்ரா திரைப்படங்களுடனும், திரைப்பட உலகத்துடனும் வெறித்தனமாக இருப்பார். பிரபல திரைப்பட ஹீரோ ஜெய்சங்கரை அவர் தெய்வமாக நினைத்து வணங்குகிறார். அவர் திரையில் சித்தரிக்கும் அனைத்து காட்சிகளையும் உண்மை என நம்புகிறார். அவள், அவரை தனது கனவுகளின் சிறந்த மனிதராக மாறுகிறார். மேலும் அவள் அவரது பெயரை கையில் பச்சை குத்திக் கொள்கிறாள். அவளது சகோதரர் மற்றும் அவரது மைத்துனர் ஏற்பாடு செய்த திருமணத்தை செய்ய மறுத்த போது அவள் வாழ்க்கை மாறுகிறது. ஒரு கட்டத்தில், அவர் மாமா அவளை, ஒரு நட்சத்திரத்தின் நிஜ வாழ்க்கையை சுற்றி ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்வதன் மூலம், அவளுக்கு உண்மையான உலகத்தைக் காண்பிக்கிறார்.

இந்த பணத்தில் தன்னுடைய ரசிகை ஒருவரின் வாழ்க்கை, சினிமாவால் வீணாவதை கண்டு வருந்தும் ஜெய்சங்கர் தங்களுடைய நிஜ வாழ்க்கைக்கும், திரைப் பிம்பத்துக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவதற்காக அவரை தன்னுடைய பட ஷுட்டிங நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார். அதே போல் சினிமாவில் நடிப்பது போல் வருபவர்கள் அனைவருக்கும் தங்களால் உதவி செய்ய முடியாது என்பதையும், தங்களுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் இருப்பதையும் அவருக்கு உணர்த்துகிறார்.

அதேபோல் சண்டைக் காட்சியில் சண்டையிடும், நாங்கள் திரைக்குப் பின்னால் நண்பர்கள் என்பதையும் அவருக்கு புரிய வைக்கிறார். திரையில் பார்ப்பது அனைத்தும் நிஜமல்ல என்றும், மற்றவர்கள் வேலைக்குச் செல்வது போல், அது தங்கள் தொழில் என்பதையும் தெளிவு படுத்துகிறார். சினிமாவில் வரும் காட்சிகள் பெரும்பாலானவை சுவாரஸ்யத்துக்காக சேர்க்கப்பட்டவை என்றும், நிஜ வாழ்வில் இது போன்ற நடக்க இயலாது என்பதை எடுத்துக் கூறுகிறார். நிழலுக்கும் நிஜ வாழ்வுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்த பின்னர், ஜெயசித்ரா தன்னைச் சுற்றியுள்ள உறவினர்களின் நிஜமான அன்பை புரிந்து கொண்டு, தன்னுடைய கனவுலகிலிருந்து நனவுலகிற்கு வருகிறார் என்பதை அழகாக எடுத்துக் கூறிய படம்.


அந்த கால கட்டத்தில் சினிமா என்பது வெளியுலகிற்கு வராத காலம். அனைத்து படப்பிடிப்புகளும் ஸ்டூடியோவிற்குள்ளேயே எடுக்கப்பட்டது. சினிமா என்பது அதன் தொடர்பில்லாத மக்களுக்கு ஒரு மாய உலகமாகவே இருந்தது. அதில் வரும் ஒவ்வொரு காட்சிகளையும் நிஜம் என்றே நம்பினார்கள். வெயில், மழை, புயல், பூகம்பம் என அனைத்தும் உண்மையெனவே நம்பினார்கள். அந்த கால கட்டத்தில் இது அத்தனையும்செயற்கையாக உருவாக்கப்பட்டு எடுக்கப்பட்டவை என்பதை திரையில் காட்ட ஒரு தைர்யம் வேண்டும். ஏனெனில் இது அத்தனையும் போலி என்று காட்டினால் சினிமா மீதுள்ள ஈர்ப்பு குறைய வாய்ப்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அதையும் மீறி இந்தபடத்தை எடுத்து வெற்றிப்படமாக்கியது முக்தா சீனிவாசனின் வெற்றி என்றுதான் குறிப்பிட வேண்டும். இதில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா, கமலஹாசன், மேஜர் சுந்தர்ராஜன், சவுகார் ஜானகி, சோ. ராமசாமி, வி.கே.ராமசாமி, எஸ்.வரலட்சுமி, சச்சு, செந்தாமரை, நீலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கே.பாலாஜி, மனோரமா, சி.ஐ.டி சகுந்தலா, ஏ.பீம்சிங், பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தனர்.


இந்த படத்தில் சங்கர் கணேஷ் இசையமைக்க வாணி ஜெயராம், டி.எம்.சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் பாடி இருந்தனர். பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார்.. இதில் வாணி ஜெயராம் பாடிய 'என் உள்ளம் அழகான வெள்ளித்திரை' என்ற பாடலை இன்றும் கேட்கலாம்.

சினிமாவில் நடிப்பை மட்டுமே ரசிக்க வேண்டும், சினிமா நடிகனை அல்ல என்பதை எடுத்துக்காட்டும் படம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News