சொன்னது நீ தானா? சொல்... சொல்... என் உயிரே...!

எம்.எஸ்.வி.,யிடம் திட்டு வாங்கிய கவிஞர் கண்ணதாசன், அதையே பாடலாக எழுதி ஹிட் அடித்தார்.;

Update: 2024-09-05 09:53 GMT

கவிஞர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் 

கவிஞர் கண்ணதாசனின் வருகைக்காக மொத்த ஆட்களும் காத்திருந்தார்கள். எம்எஸ்வி அடிக்கடி வாட்சை பார்த்துக் கொண்டிருந்தார். இதைக்கவனித்த சித்ராலயா கோபு “என்னண்ணே ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆக இருக்கீங்க?” என்று கேட்டார். அதற்கு விஸ்வநாதன் “இந்தப் பாட்டை கம்போஸ் பண்ணிட்டு, வேலுமணி சாரோட பணத்தோட்டம் பட ரீ-ரிக்கார்டிங்குக்குப் போகணும். இந்த ஆளை (கண்ணதாசனை) இன்னும் காணோமே” என்று புலம்பிக் கொண்டிருக்க, ஸ்ரீதரோ இந்தப் பாடலை நீங்க கம்போஸ் பண்ணிக் கொடுத்துட்டுத்தான் வேறு இடத்துக்குப் போகணும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். இடையிடையே சரவணா ஃபிலிம்ஸிலிருந்து ஃபோன் வந்த வண்ணம் இருந்தது.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து விட்ட விஸ்வநாதன் “என்னய்யா இந்த குடிகாரரோடு இதே வேலையா போச்சு. சொன்ன நேரத்துக்கு வந்து தொலைய மாட்டேங்கிறார்” என்று கத்தி விட்டார். (சாதாரணமாக இப்படி மரியாதையில்லாமல் கண்ணதாசனைப் பற்றிப் பேசமாட்டார். ஆனால் வேறு கம்பெனியில் இருந்து அடிக்கடி வந்த போன் அவரை பொறுமையிழக்கச் செய்து விட்டது).

கண்ணதாசனும் வந்தார். ஸ்ரீதரும் சிச்சுவேஷனைச் சொன்னார். ஆஸ்பத்திரியில் புற்று நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவன், தான் எப்படியும் இறந்து விடுவோம் என்பதையும், அந்த ஆஸ்பத்திரி டாக்டர் தன் மனைவியின் முன்னாள் காதலன் என்பதையும் அறிந்து, தான் இறந்து விட்டால் அந்த டாக்டரை தன் மனைவி மணந்து கொள்ள சம்மதிக்க வேண்டும் என்று கூற, மனம் நொறுங்கிப் போகும் மனைவி தன் சோகத்தைப் பிழிந்து பாடுவதாக காட்சியை விளக்கினார்.

பி.சுசீலாவும் தயாராக இருக்கிறார். விஸ்வநாதன் மெட்டுக்களைப் போட்டு காட்டுகிறார். அந்த மெட்டுகளுக்கு கண்னதாசனுக்கு வார்த்தைகள் வர மறுக்கின்றன. அவர் சொல்லிய சில வரிகளும் ஸ்ரீதருக்குப்பிடிக்கவில்லை.

இடையில் பாத்ரூம் போவதற்காக கண்ணதாசன் எழுந்து போகிறார். அவர் திரும்பி வரும்போது ஒருவர் கண்ணதாசனிடம் “நீங்க வர லேட்டாச்சுன்னு விஸ்வநாதன் சார் உங்களை குடிகாரர்னு திட்டிட்டாருங்க” என்று சொல்லி விட்டார். (அதாவது போட்டுக் கொடுத்து விட்டார்).

கண்ணதாசன் கோபப்படவில்லை. மீண்டும் வந்து அமர்ந்தவர், எம்.எஸ்.வி.யிடம் “ஏண்டா விசு, என்னை நீ குடிகாரன்னு திட்டினியாமே! அப்படியா, ஆச்சரியமா இருக்கே! நீ இப்படியெல்லாம் சொல்லமாட்டியே! நீயா இப்படிச் சொன்னே! என்னால் நம்பவே முடியலை”

சட்டென்று ராகத்தோடு “சொன்னது நீதானா… சொல்… சொல்… சொல்… என்னுயிரே” என்று பாடிக் காட்ட…

ஸ்ரீதர் எப்படிப்பட்டவர்? ‘கப்’பென்று பிடித்துக்கொண்டார் “ஐயோ கவிஞரே, இதுதான்யா நான் கேட்டது. எப்படி திடீர்னு உங்களுக்கு வந்தது? விசு அண்ணே அவர் பாடிக் காட்டிய மெட்டையே வச்சுக்குவோம். அதையே தொடர்ந்து மெட்டுப் போடுங்க. கவிஞரே நீர் வரிகளைச் சொல்லுமய்யா” என்று கூற, சற்று முன்னர் இருந்த இறுக்கமான சூழ்நிலை மறந்து கண்ணதாசனும் விஸ்வநாதனும் மற்றும் குழுவினரும் உற்சாகமானார்கள்.

யூனிட்டே வாய் பிளந்தது. மை காட்! இன்னொருவனை திருமணம் செய்யும்படிக் கூறும் கணவனுக்கு பதிலாக “சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே” என்ற வரிகள் எவ்வளவு கனகச்சிதமாகப் பொருந்துகின்றன என்று திகைப்பில் ஆழந்தனர். அதே உற்சாகத்தோடு கண்ணதாசன் வரிகளை அள்ளி வீச, மெல்லிசை மன்னர் அவற்றுக்கு சந்தம் அமைத்துக் கொண்டே வந்தார்

சொன்னது நீதானா… சொல்… சொல்… சொல்… என்னுயிரே சம்மதம்தானா… ஏன்…ஏன்…ஏன்…என்னுயிரே இன்னொரு கைகளிலே… யார்…யார்… நானா... எனை மறந்தாயா…ஏன்…ஏன்…ஏன்…என்னுயிரே

மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே

மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே

என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே

இறுதி வரை துணையிருப்பேன் என்றதும் நீதானே

இன்று சொன்னது நீதானா

சொல் சொல் சொல் என்னுயிரே

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை

தெருவினிலே விழலாமா

தெருவினிலே விழுந்தாலும்

வேறோர் கை தொடலாமா..

ஒரு கொடியில் ஒரு முறைதான்

மலரும் மலரல்லவா...

ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா...?

பாடல் எழுதி முடிந்ததும், எம்எஸ்வி அவர்கள் கண்ணதாசனைக் கட்டித் தழுவி கண்ணீர் விட்டார். “செட்டியாரே, லேட்டாக வந்தாலும் வட்டியும் முதலுமாக அள்ளித் தந்துட்டீங்கய்யா” என்று மனம் மகிழ்ந்தார். இவர்களுடைய போட்டியில் ஸ்ரீதருக்கு அருமையான பாடல் கிடைத்து விட்டது.

பின்னர் இந்தப் பாடலை சிதார் இசையுடன் பி.சுசீலா நம் நெஞ்சைப் பிழியும் வண்ணம் பாடியதும், அதற்கு சோகமே உருவாக தேவிகா நடித்ததும் சரித்திரங்கள்.

Tags:    

Similar News