பணப்பெட்டியுடன் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஷிவின்: என்னாச்சு பிக்பாஸ் வீட்டுல?
கதிரவன் பணமூட்டையுடன் வெளியேறிய நிலையில், அடுத்ததாக ஷிவின் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், அமுதவாணன், மைனா, ஷிவின், கதிரவன் ஆகிய 6 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு கடைசி சில வாரங்களுக்கு முன் பணப்பெட்டி ஒன்று வீட்டுக்குள் அனுப்பப்படும். ஆனால் இந்த சீசனில் இறுதி வாரத்தில் தான் அந்த பணப்பெட்டி அனுப்பப்பட்டு உள்ளது. வழக்கமாக பணப்பெட்டியை அனுப்பும் பிக்பாஸ், இந்த முறை வித்தியாசமாக பணமூட்டையை அனுப்பி வைத்துள்ளார்.
இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களில் முதல் இரண்டு சீசன்களில் யாருமே இந்த பணப்பெட்டியை எடுக்கவில்லை. இதையடுத்து மூன்றாவது சீசனில் கவின் ரூ.5 லட்சம் தொகையுடன் வெளியேறினார். நான்காவது சீசனில் கேப்ரியல்லா ரூ.5 லட்சத்துடன் வெளியேறினார். ஐந்தாவது சீசனில் சிபி சந்திரன் ரூ.12 லட்சம் அடங்கிய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வெளியேறினார்.
இதுவரை நடந்த முடிந்த சீசன்களில் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் தொகையுடன் தான் போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். ஆனால் கதிரவன் ரூ.3 லட்சத்துடன் வெளியேறியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் குறைவான தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறிய நபர் என்றால் அது கதிரவன் தான். பிக்பாஸ் அனுப்பிய பணமூட்டையை எடுத்துக்கொண்டு கதிரவன் வெளியேறியதால், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
பொதுவாக பணப்பெட்டி அனுப்பப்படும் போது பணத்தின் மதிப்பை பிக்பாஸ் அதிகரிக்க அதிகரிக்க தான் சுவாரஸ்யம் அதிகரிக்கும். ஆனால் கதிரவன், பிக்பாஸுக்கு நேரமே கொடுக்காமல் உடனடியாக பணமூட்டையை எடுத்துக் கொண்டு வெளியேறியதால், பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக ஒரே சீசனில் இரண்டாவது முறையாக பணப்பெட்டியை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார் பிக்பாஸ். ரூ.3 லட்சம் தொகையுடன் அந்த பணப்பெட்டி வந்துள்ளது. ஒரு நிமிடத்துக்கு ரூ.2500 வீதம் அதன் மதிப்பு கூடிக்கொண்டே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டளது.
இந்த பணப்பெட்டியை விக்ரமன் மற்றும் அசீம் ஆகியோர் தாங்கள் எடுக்கப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்து விட்டனர். எஞ்சியுள்ள 3 பேரில் அமுதவாணனும், மைனாவும் ரூ.20 லட்சத்துக்கு மேல் வந்தால் பணப்பெட்டியை எடுக்க முயற்சிப்போம் என கூறியுள்ளனர். அதேபோல் ஷிவின் 10 லட்சத்துக்கு மேலே சென்றால் யோசிப்பேன் என சொல்லியிருந்தார்.
தற்போது கிடைத்துள்ள தகவல்படி, அந்த பணப்பெட்டியில் ரூ.10 லட்சத்துக்கு மேல் தொகை இருந்ததாகவும், அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு ஷிவின் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக வாய்ப்பு இருக்கிறது. பைனலில் வெற்றிபெற தகுதி கொண்ட போட்டியாளராக பார்க்கப்பட்ட ஷிவின் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ள தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.