வசூல் சாதனை… ஆயிரம் கோடியைக் கடந்த 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம்.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான, 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் ஜப்பானில் முந்தைய படங்களின் வசூலை முறியடித்துள்ளது.
தெலுங்குப் பட உலகின் முன்னணி இயக்குநரும் இந்தியத் திரைவானிலும் முக்கிய இடத்தில் இடம் பிடித்திருப்பவருமான இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் தெலுங்குத் திரையுலகைத் தாண்டி அனைத்து மொழிகளிலும் பெருவாரியான ரசிகர்களின் வரவேற்புடன் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தில் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நாயகர்களாக நடித்திருந்தனர். இவர்களும் முக்கியக் கதாபாத்திரத்தில் ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஆஸ்கர் விருதுவிழாவில் போட்டியிடும் என்கிற நிலையில், தற்போது ஜப்பானிலும் 'ஆர்.ஆர்.ஆர்.' படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்.' படம், உலகம் முழுவதும் வெள்ளித் திரையில் வெளியாகி, பிரமாண்டமான வெற்றிப் பெற்றது. மேலும், பாக்ஸ் ஆபீஸிலும் 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் அசர வைத்துள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் மேக்கிங்கை ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டியதோடு, இந்தப் படம் கண்டிப்பாக ஆஸ்கர் விருதுக்கு வெல்லும் என ஆரூடமும் கூறியிருந்தனர்.
இந்தநிலையில், இப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களிலும் வெளியானது. நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ், ஜீ5 தளங்களில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்.' படத்திற்கு, ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில், இந்தத் திரைப்படம் தற்போது ஜப்பான் நாட்டிலும் வெளியாகியுள்ளது. ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான, 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் புரமோஷனுக்காக படத்தின் இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஜப்பானுக்கு சென்றிருந்தனர்.
மேலும், ஜப்பானில் அந்நாட்டு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான, 'ஆர்.ஆர்.ஆர்.', முதல் நாளில் சூப்பரான வசூலை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. ஜப்பான் பாக்ஸ் ஆபீஸில் இருந்து வெளிவந்த தகவலின்படி, முதல் நாளில் மட்டும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ரஜினியின் 'முத்து', ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி', பிரபாஸ் நடிப்பில் வெளியான, 'சாஹோ' ஆகிய படங்கள்தான் ஜப்பானில் அதிகம் வசூல் செய்த படங்களாக இருந்தன. இப்போது, 'ஆர் ஆர் ஆர்.' படம், அனைத்து படங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் நாளிலேயே மாஸ் காட்டியுள்ளது. மேலும், இந்த வார இறுதிக்குள் மூன்று கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் எனக் கூறப்படுகிறது.
'ஆர்.ஆர்.ஆர்.' படத்தைக் கொண்டாடி வரும் ஜப்பான் ரசிகர்கள், மேக்கிங், சினிமோட்டோகிராபி, ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் சூப்பராக இருப்பதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனால், 'ஆர் ஆர் ஆர்.' படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. ஆஸ்கர் போட்டியில், 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் மொத்தம் 15 பிரிவுகளில் போட்டியிடவுள்ள நிலையில், ஜப்பானில் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது, புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த நம்பிக்கை, பல இயக்குநர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.