இந்தி இசை உலகின் புரட்சியாளர் ஆர்.டி.பர்மன்
இந்தி இசை உலகினை புரட்டிப் போட்ட ஆர்.டி.பர்மனை பற்றி இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்
இந்தி இசை உலகினை புரட்டிப் போட்ட ஆர்.டி.பர்மனை பற்றி இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். அப்பாவைத் தான் புக் பண்ண வந்தார் நடிகர் மெஹமூத் தன் படத்துக்கு இசையமைக்க. ஆனால் அவரிடம் தேதி இல்லை. ஹாலில் தபேலா வாசித்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்தார். சட்டென்று அவரை புக் செய்து விட்டார்.
இசைப் பேரலையொன்றை இயக்கி விட்டிருக்கிறோம் என்று அப்போது அவருக்குத் தெரியாது. படம் ‘Chote Nawab.' பாடல்கள் வெற்றி. ஆர்ப்பரிக்கும் இசை! யார் அது? என்று எல்லாரும் பார்க்க ஆரம்பித்த அவர் ஆர். டி. பர்மன். அந்தக் குழந்தை முகம்! அதன் பின்னே ஒரு இசை மேதை.. ‘Pancham’ இவர் செல்லப் பெயர். அஞ்சாவது நோட். பஞ்சமி.
மெஹ்மூதின் அடுத்த ‘Bhoot Bangla’ வில் கலக்கி விட்டார். ‘Aavo Twist Karen…’’வும் ‘Pyar Karta Jaa..’ வும் இளைஞர்களை அப்படி ஈர்த்தன என்றால் ‘O Mere Pyar Raja...’ உருக வைத்தது.
அப்புறம் ‘மூன்றாம் வீடு’ (Teesri Manzil) வந்தது. முதலிடத்துக்கு இவர் போனார். ‘Aajaa Aajaa…’ என்று ஷம்மி கபூர் பாட, ரசிகர்கள் ஆட, இசை உலகம், 'இது என்னடா புது மாதிரி துள்ளலிசையென்று துள்ளி எழுந்து உட்கார்ந்தது. ‘தம் மோரா தம்… ‘ வந்ததும் 1971 -ன் இசைக் கோப்பையைத் தனதாக்கிக் கொண்டது. ராஜேஷ்கண்ணா வந்து சேர்ந்து கொள்ள கிஷோர் குமாருடன் ஹிட்டுக்களை இசைத் தட்டுக்களில் அடுக்கினார்.
Electronic Rock -ம் Jazz -ம் அவர் இசையில் விளையாட, சங்கர் ஜெய்கிஷன், நய்யாரெல்லாம் தந்து கொண்டிருந்த கலகலப்பான இசையை அடுத்த படிக்கு எடுத்துச் சென்றார். அல்ரெடி ‘Chalti Ka Naam Gadi’ யிலிருந்தே அப்பாவின் சில படங்களுக்கு அசிஸ்டன்ட் ஆக வேலை பார்த்தவர். தேவ் ஆனந்தின் பிரபல பாடல் ‘Hey Apna Dil..’ பாட்டில் மவுத் ஆர்கன் வாசித்திருக்கிறார்.
சின்ன வயதில் நண்பர்களுடன் சினிமா பார்த்துக் கொண்டிருந்த போது அந்தப் பாடலை கேட்டதும் துள்ளி எழுந்து ஹேய், அது என் டியூன் என்று ஆர்ப்பரித்தார். இவர் வாசித்துக்கொண்டிருந்த ட்யூனைக்கேட்ட அப்பா அதை தன் படத்தில் போட்டிருக்கிறார். அதைவிட வேறு என்ன ஆனந்த அங்கீகாரம் வேண்டும் அவருக்கு? 9 வயதில் இவர் போட்ட டியூனைத்தான் ‘Aye Meri Topi…’ என்று தேவ் ஆனந்த் பாடினாராம் ‘Funtoosh’ படத்தில். Pyaasa படத்தில் வந்த ‘Sar Jo Tera Chakraya…’ பாடலும் இவர் ஆரம்பப் பாடல்களில் ஒண்ணுன்னு சொல்வாங்க.
ஒவ்வொருத்தர் டேஸ்டுக்கும் அவரிடம் ஒரு பாட்டு இருக்கும். உங்களுக்கு ‘Tere Bina Zindagi Se Koi...’ பிடிக்கும் என்றால் எனக்கு 'Goyake Chunanche..’ உயிர். அவளுக்கு ‘O Mere Sona Re..’ ஃபேவரிட் என்றால் இவனுக்கு ‘Hum Dono Do Premi..’ பிரியம். ‘எப்படி போட்டேன் என்று தெரியாது, அதுவாக அமைந்தது..’ என்பார் எப்போதும் அடக்கமாக.
நீங்களே பாடுங்க என்று ரமேஷ் சிப்பி சொல்லி இவர் பாடிய ‘மெஹபூபா மெஹபூபா…’ அத்தனை பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கொரு குரல் வைத்திருந்தார் என்றால் அமிதாப்புக்கு இன்னொரு குரல் வைத்திருந்தார். ‘Pukar’ படத்தில்அமிதாப், ரந்திர் சேர்ந்து பாடும் அந்த ‘Buchke Rehna Re Baba..’ பாடலில் எது கிஷோர் எது ஆர்.டி. என்று கண்டு பிடிப்பது மகா கடினம்.
70 களில் வருஷா வருஷம் நாமினேஷன் பெற்றாலும் filmfare அவார்டை வாங்கியது 1983 இல் கமல் நடித்த ‘Sanam Teri Kasam’ படத்தில் தான். அப்படி ஒரு டைட்டில் இசையை யாருமே போட்டதில்லை. திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆம், ‘ஷோலே’ படத்தில் வரும் இசையைத்தான் சொல்கிறேன். ரயில்வே ஸ்டேஷனில் ஆரம்பித்து மெல்ல அந்தக் கிராமம் முழுவதையும் சுற்றிக் காட்டும் அந்த இசை படத்தின் tone -ஐ அற்புதமாக கொடுத்து விடும்.
எப்போதும் இசையே சிந்தனை. ஃப்ளைட்டில் சென்று கொண்டிருந்தபோது இவர் முணுமுணுத்த டயூனை கவனித்த ராஜேஷ் கண்ணா பிற்பாடு ஞாபகமாக அதைக் கேட்டு வாங்கினாராம் ‘Kati Patang’ படத்துக்காக. பாடல், ஊகித்திருப்பீர்கள், அந்த அட்டகாச ‘Yeh Jo Mohabbat Hai..’
வித்தியாசமாக எதையாவது வழங்கிக் கொண்டே இருப்பதுதான் அவரது இசை. ‘தனியே நாம் எதுவும் செய்யா விட்டால் தனியாக நம்மைக் கவனிக்க மாட்டார்கள்,’ என்பாராம். தேவ் ஆனந்தின் ‘Ishq Ishq Ishq’ படத்தில் ‘Wallah Kya Najara Hai..’ பாடலின் பல்லவி முதல் வரியை அதே படத்தின் வேறிரு பாடலின் சரணங்களில் அழகாகக் கொண்டு வந்து முடிச்சிட்டிருப்பார்.
‘ஆர். டி. பர்மன் இன்றைக்கு இருந்தால் நான் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து அவர் இசையமைப்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன் நாளெல்லாம்,’ என்கிறார் பிரபல பாடகர் அர்மான் மாலிக். Amar Prem படத்தில் அப்படி ஒரு கிளாசிக்கல் மியூசிக் கொடுத்திருப்பார். அந்த ‘Raina Beet Jaye..’ பாடலை ஆரால் மறக்க முடியும்?
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல இவரது கார் கதவும் கானம் இசைக்கும். சோடா பாட்டில்களை உடைத்து, ‘Churaliya..’ (Yadon Ki Bharat) பாடலுக்கும், சீப்பை மேஜையில் உரசி ‘Tere Samne Wale... ‘ (‘Padosan’) பாடலுக்கும் என்று கையில் கிடைக்கிற வஸ்துக்களிலிருந்து விதவிதமான தாளங்கள்...மூச்சு வாங்குவதைக் கூட பாடலின் வீச்சு ஆகியிருப்பார், ‘Piya Tu...’ (‘Caravan’) பாடலில்! ‘Hoga Tumse Pyare Kaun..’ (Zamane Ko Dhikana Hai) பாடலில் ஊட்டி ரயில் விசிலை உசிதமாகக் கொடுத்திருக்கும் அழகே தனி!
கிஷோர்குமார் தான் இவரது ஆஸ்தான பாடகர் என்றாலும் ரபியின் மறு வருகையை ஜொலிக்க வைத்த பாடல்களில் பல இவருடையது. ‘Zamane Ko Dikhana Hai’ யில் வரும் ‘Pucho Na Yaar Kiya Hua ..’ பாடல் ஒன்று போதுமே?
‘அந்தப் பெண்ணை பார்த்தேன்..
அவள் ஒரு மலரும் ரோஜாவை போலே...
கவிஞனின் கனவைப்போலே...
காட்டின் மானைப்போலே...
பௌர்ணமி இரவைப்போலே...
வீணையின் ராகம்போல...
காலையின் அழகைப்போலே…
அலைகளின் விளையாட்டைப்போலே...
ஆடும் மயிலைப்போலே...
பட்டு நூலைப் போலே…’
என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகும் அந்த ‘1942, A Love Story’ யின் ‘Ek Ladkhi Ko Dekha..’ பல்லவிகளை மட்டும் அடுக்கி என்னவொரு இசைச் சிலிர்ப்பு! Filmfare அவார்டுக்காக ஒரு பாடலை விட்டு விட்டுத்தான் மறைந்தார்.
நன்றி: Janarthanan KB