அண்ணனைக் கொல்லத் துடிக்கும் தம்பிகள்! பழிக்கு பழி வாங்கும் தங்கை!
அப்பா போட்ட அழுக்கு சட்டையை அயர்ன் பண்ணி போட்ட மாதிரி ஒரு அசுரன் ஜெராக்ஸ் காப்பி.;
ராயன் படத்தின் கதை குறித்தும் படத்தின் பாசிடிவ் நெகடிவ் குறித்தும் இந்த பதிவில் காண்போம்.
தனுஷ் நடிப்பில் அவரே எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ராயன். இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க அவரது தம்பிகளாக சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், தங்கையாக ரெஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் அண்ணன், இரண்டு தம்பிகள், அவர்களது அப்பா, அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு புதிதாக ஒரு குடும்ப உறுப்பினர் வர காத்திருக்கிறார்கள். பிரசவ வலியில் தாய் கத்திக்கொண்டிருக்க, இதனை வேடிக்கைப் பார்க்கின்றனர் அண்ணன் தம்பிகளான 3 சிறுவர்கள்.
மூத்தவன் காத்தவராயன், நடுவன் முத்துவேல்ராயன், கடைக்குட்டி மாணிக்கவேல்ராயன். தம்பிகள் இருவருக்கும் தங்கள் பெற்றோருக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பது ஆசை. அப்படி ஆணாக இருந்தால் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆள் இருக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் மூத்தவன் ராயன் தனக்கு ஏற்கனவே இரண்டு தம்பிகள் இருக்கிறார்களே தங்கைதான் வேண்டும் என்று கூறுகிறான்.
Raayan தலைகீழாக மாறிய டிரெண்ட்..! அசுரன் பட காப்பியா?
அவன் நினைத்தபடியே தங்கை தேவதையாக வருகை தருகிறாள். தங்கையை நன்றாக கவனித்துக்கொள்கிறான். அவளுக்கு தானே பெயர் வைக்கிறான். துர்கா எனும் அந்த குழந்தையை சீராட்டி வளர்க்கிறான். சில மாதங்களுக்கு பிறகு முக்கியமான ஒரு விசயமாக டவுணுக்கு செல்கிறார்கள் ராயனின் பெற்றோர்கள். ராயன் தன் இரண்டு தம்பிகளையும் சில மாதங்களுக்கு முன் பிறந்த தங்கையையும் பார்த்துக்கொள்கிறான். இரவுக்குள் வந்து சேர்வதாக கூறிவிட்டு சென்ற தந்தையும் தாயும் இரண்டு நாட்களாகியும் வராத நிலையில், பூசாரி வீட்டுக்கு செல்ல, அவன்தான் பெரிய வேலையாக பார்த்துவிடுகிறான்.
பெண் குழந்தையை விலை பேசி விற்க ஆளையும் கூட்டி வந்துவிடுகிறான். இதனை அறிந்த ராயன், தன் தம்பிகளையும் தங்கையையும் அங்கிருந்து கூட்டிச் சென்றுவிட நினைக்கிறான். ஆனால் பூசாரி உள்ளே வந்துவிட அவர்களுக்குள் வாக்குவாதம் பின் கைகலப்பும் நடக்கிறது. பூசாரியை வெட்டிவிட்டு தன் தம்பி தங்கையுடன் தப்பிக்கிறான் ராயன்.
தப்பிக்க நினைத்து ஏறிய லாரி சென்னையில் வந்து இறங்கியதும் சேகர் எனும் வியாபாரியின் அறிமுகம் கிடைக்கிறது. அவன் மூலம் ராயன் தம்பி தங்கைகளின் வாழ்வில் புதிய வெளிச்சம் பிறக்கிறது. வளர்ந்து பெரியவர்களாகி, ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்து பிழைக்கிறார்கள்.
தங்கைக்கு திருமண வயது வர, அந்த நேரத்தில் ராயன் பெரிய கேங்க் ஒன்றில் மாட்டிக்கொள்ள நேர்கிறது. அந்த கேங்கை இல்லாமல் செய்தால் மட்டுமே இனி வாழ முடியும் என்கிற நிலையில், தன் தம்பி தங்கைகளுக்காக துணிந்து களமிறங்குகிறான். இதனால் தன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? தம்பிகள் என்ன ஆகிறார்கள்? தங்கைக்கு திருமணம் நடந்து முடிந்ததா? எதிரிகளை ராயன் என்ன செய்கிறான்? என்பதற்கு விடையாக வருகிறது ராயன் திரைப்படம்.
டாப் 5 பெஸ்ட்
படத்தில் சிறந்த 5 விசயங்களைப் பட்டியலிடுவது கொஞ்சம் கஷ்டமான விசயமாகவே இருக்கிறது. ஏனென்றால் படத்தில் சிறப்பாக ஏ ஆர் ரஹ்மான் இசை, தனுஷ், துஷாரா விஜயன், திரைக்கதையில் சில இடங்கள் தவிர மற்றவை வழக்கம்போல ரத்தக்களறியில் இளைஞர்களை உசுப்பேத்தும் விசயமாகவே அமைந்துள்ளது.
இசை
ஏ ஆர் ரஹ்மானின் இசையில் ஓ ராயா பாடல் தவிர மற்ற எதுவும் மனதில் நிற்கவில்லை. அதேநேரம் அடங்காத அசுரன் நான் பாடல் திரையில் காண சிறப்பாக இருக்கிறது.
பின்னணி இசையில் தனுஷுக்கு போடப்பட்ட இசை மட்டும் தனியே தெரிகிறது. ஒருவகையில் ஏ ஆர் ரஹ்மான் வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் படங்களுக்கு பிறகு நல்ல இசை ஒன்றை கொடுத்துள்ளார். கம்பேக்காக அமைந்துள்ளது எனலாம். ஆனால் ஏ ஆர் ரஹ்மான் இல்லையென்றால் படம் சராசரிக்கும் மிக கீழே போயிருக்கும் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
தனுஷ்
நடிப்பு அசுரன் என்று சொன்னாலும் அதற்கு தகுந்த தனுஷ் இந்த படத்தில் பெரியதாக எந்த உணர்வுகளையும் முகத்தில் காட்டாமலேயே நடித்திருக்கிறார். கதாபாத்திரத்துக்கு தேவையானதால் அப்படி செய்திருக்கிறார் என்றாலும், அசுரன், வடசென்னை மாதிரியான படங்களில் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்த தனுஷ் இவரில்லை என்றே தோன்றுகிறது.
வெற்றிமாறன் அளவுக்கு தனுஷ் நடிகர்களிடம் உணர்வுகளையும் நடிப்பையும் வாங்கவில்லை என்று தெரிகிறது. முக்கியமாக மகாநடிகன் தனுஷ் கூட இந்த படத்தில் இரண்டு மூன்று சீன்கள் தவிர பெரிதாக நடிப்பில் மிளிரவில்லை.
துஷாரா விஜயன்
தனுஷ் அடக்கி வாசிக்க, தங்கையாக நடித்த துஷாரா விஜயன் பின்னி பெடலெடுத்துள்ளார். முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளிலும் சென்டிமெண்ட் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். கூடுதல் காட்சிகள் அவருக்கு கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனுக்கும் நடிக்க ஸ்கோப் இருந்தும் அதற்கான திரைக்கதையில் மெனக்கெடவில்லை இயக்குநரான தனுஷ். தன்னை தூக்கி சாப்பிட்டுவிடுவார் என எஸ் ஜே சூர்யாவை நினைத்தாரோ என்னவோ அவருக்கும் நடிக்க ஸ்கோப் குறைவாகவே இருக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது.
காட்சிகள்
ஆரம்பகட்டத்தில் திருநெல்வேலி கிராமத்தில் நடக்கும் காட்சிகள் இயல்பாகவும் நெஞ்சுக்கு நெருக்கமாகவும் அமைந்துள்ளது படத்தின் பிளஸ். ஆனால் அதே குடும்பம் நெல்லை பாஷையிலிருந்து சென்னை பாஷை பேச ஆரம்பித்ததும் அந்த குடும்ப உணர்வுகளும் பாசமும் இல்லையே என்பது போல ஆகிவிட்டது. தனுஷ் - துஷாரா இடையே இருக்கும் அண்ணன் தங்கை கெமிஸ்ட்ரி, மற்ற இருவருடனும் இருவருக்கும் இல்லை.
துரை அண்ணனாக வரும் சரவணனை கொல்லும் காட்சிக்கு முன்னதாக, நடு அண்ணன் குத்துப்பட்டு கிடக்கும்போது அவனுக்கு தையல் போடும் துஷாரா, தனுஷுக்கு கால் வரும்போது சிறப்பாக நடித்திருப்பார்கள். அந்த காட்சியும் விறுவிறுப்பாக நன்றாக இருக்கும்.
ராயன் அண்ணன், தன் மற்ற அண்ணன்களால் குத்துப்பட்டு கிடக்கையில், தங்கையாக அவன் உயிர் காக்க போராடும் காட்சியும் சிறப்பாக இருக்கும்.
ரேட்டிங்
முதல் பாதி - 7/10
இரண்டாம் பாதி - 6/10
முடிவுரை
படம் திரையரங்குகளில் காண நன்றாகவே இருந்தாலும் படத்தில் பல குறைகள் இருக்கின்றன. தனுஷின் எழுத்து மேம்பட்டிருக்கிறது என்றாலும் அவருக்குள் வெற்றிமாறன் அவ்வப்போது புகுந்து எழுதியிருக்கிறார் என்பது விளங்குகிறது. ஆனால் அவரிடமே கதையைக் கொடுத்து ஒரு அட்வைஸ் கேட்டிருக்கலாம் போல.
நெகடிவ் என்ன?
அசுரன் படம் ஏற்கனவே வந்துவிட்டது. அது மிகவும் சிறப்பாகவே இருந்தது. மக்களும் நல்ல முறையில் வரவேற்றார்கள். அப்படி இருக்கையில் அதுபோல ஏன் இன்னொன்னு? அப்பா போட்ட அழுக்கு சட்டையை அயர்ன் பண்ணி போட்ட மாதிரி ஒரு அசுரன் ஜெராக்ஸ் காப்பி.