வாழ்க்கையை தேன் கலந்து பாடல்களாக கொடுத்த சித்தர் கண்ணதாசன்!
கவியரசர் கண்ணதாசனுக்கு முன்னதாகவும் எத்தனையோ கவிஞர்கள் சினிமாவில் பாட்டெழுதி இருக்கிறார்கள். ஆனால் தேன் கலந்து பாடல்களை கொடுத்தவர் கவிஞர் கண்ணதாசன்தான்.;
எத்ததனையோ கவிஞர்கள் அன்றும் இன்றும் இருந்தாலும் கண்ணதாசன் இடம், அவருக்கானதாக மட்டுமே இருக்கிறது. கண்ணதாசனைத் தான் அவரவர் தன் மனதில் ஆசனம் போட்டு அமர வைத்து சீராட்டினார்கள். காரணம்... சினிமாப் பாட்டுக்குள் வாழ்க்கையைத் தேன் கலந்து கொடுத்த சித்த மருத்துவக்காரன் கண்ணதாசன்.
‘எங்க ஊர் ராஜா’ படத்தில், ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ என்று சிவாஜியின் கேரக்டருக்கு பாட்டெழுதியிருப்பார் கண்ணதாசன். ஆனால் அதை தனக்கான பாட்டு என கேட்டவர்கள் மொத்த பேரும் வரித்து கொண்டது தான், கண்ணதாசன் வரிகளின் செப்படி வித்தை.‘காலமகள் கண் திறப்பாள் சின்னய்யா’ என்ற பாடலைக் கேட்டு ஆறுதலும் நம்பிக்கையும் அடைந்தார்கள்.
‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே’ என்ற பாட்டை கேட்டு விட்டு, தங்கை இல்லாதவர்கள் கூட அழுதார்கள். தங்கை இல்லையே என்றும் அழுதார்கள். எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா- ‘இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா இரு கை கொண்டு வணங்கவா’ என்று பிரிவுத்துயரத்துக்கு இந்த சிறகை இணைத்துக் கொண்டு ஆறுதலாகப் பறந்தார்கள்.
காதலின் அர்த்தமோ ஆழமோ தெரியாமல் இன்றைக்குத் தத்தளித்து தவித்து மருகிக் கொண்டிருக்கும் சமூகத்துக்கு, அன்றைக்கே காதலை சொன்னார் கவியரசர். இளமையிலே காதல் வரும் எது வரையில் கூட வரும், ‘முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை கூட வரும்’ என்று காதலின் ஆயுசை சொன்னார். வாழ்க்கையின் சிக்குகளுக்குள் சிக்கி தவித்து விழுந்து கிடந்தவர்களை 'மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா’ பாடல் தண்ணீர் தெளித்து எழுப்பியது.
‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ என்ற பாடலைக் கேட்டு, துக்கித்துப் பாடிய கேரக்டருக்கு தோழியானவர்கள் தோழமையானவர்கள் பலர் உண்டு. ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா’ காதலின் சோககீதம் தேசியகீதம்.
‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை’ பாடலைக் கேட்டு, வலியை மென்று தின்றவர்கள் ஏராளம். காதலியை வெட்டு, குத்து, கொல்லு என்றெல்லாம் பாடப்பட்டு வரும் இந்தக் காலத்தில், ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்பதை தாரக மந்திரமாகவும் காதலின் மந்திரமாகவும் ஆக்கிய கவிஞரின் வரிகள், வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறது இன்னமும்.
எம்ஜிஆருக்கு ஹலோ ஹலோ சுகமா, ஆமாம் நீங்க நலமா? என்று போனிலேயே பாட்டுப்பாட எழுதிக்கொடுத்தார் அன்றைக்கு. ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்’ என்று வாழ்வின் யதார்த்தம் சொல்லி பந்தி வைத்த பாட்டுக்காரன். ‘கங்கையிலே ஓடமில்லையோ?’ என்றும் பாட்டெழுதினார். ‘குடிமகனே பெருங்குடிமகனே’ என்று ’வசந்தமாளிகை’ ஜமீன் போதையில் நம்மை தள்ளாட வைத்தார்.
‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்று கண்ணனுக்கு புல்லாங்குழல் கொடுத்தார். ‘இரண்டு மனம் வேண்டும்’ என்று இறைவனிடம் கேட்டார். ‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது?’ என்று ஜனன மரணத்தை யோசிக்க வைத்தார். ‘பாரப்பா பழநியப்பா பட்டணமாம் பட்டணமாம்’ என்றும் பாடிவைத்தார். ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்றும் சொல்லி வைத்தார்.
‘காலங்களில் அவள் வசந்தம்’ என்று காதல் காவியமாக்கினார். ‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்’ என்று துயரம் சொல்லி அவரின் பேனா அழுதது. அட சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டிவிடவா?’ என்று கொஞ்சினார்.
’காய்காய்காய்’ என்று இனிக்க இனிக்க பாடல் தந்தார். தேன் தேன் தேன்’ என்று திகட்டத்திகட்ட பாடல் தந்தார். ‘நிலா லா லாலா என்று’ பாடினார். அண்ணன் இருக்கிறாரா? அந்த உறவுடன் பொருந்திப்போகும் கண்ணதாசனின் பாட்டு. தம்பி இருக்கிறாரா? ‘அம்மம்மா தம்பி என்று நம்பி’ என்று அதற்குப் பொருந்துவதற்கும் ஒரு பாட்டு.
தங்கை உண்டா? பாட்டு உண்டு. அக்கா இருக்கிறாரா? அவருக்கும் உண்டு பாட்டு. சகோதரிகளுக்குள்ளான உறவா? அதைச் சொல்லவும் பாட்டு. சகோதரர்களுக்குள் இருக்கும் உறவா? அவர்களுக்கும் எழுதியிருக்கிறார் பாட்டு. ’பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்’ என்றும் ‘ஏன் பிறந்தாய் மகனே’ என்றும் பிள்ளையை வைத்துக்கொண்டு பாடியிருக்கிறார். ‘சொந்தம் ஒருகைவிலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒருகால்விலங்கு நான் போட்டது’ என்றும் குமுறியிருக்கிறார்.
கல்யாணத்துக்கு, வளைகாப்புக்கு, காதலின் வெற்றிக்கு, காதலின் தோல்வி சொல்ல, நட்பின் ஆழம் சொல்ல, உத்தியோகம் கிடைக்க, வியாபாரத்தில் செழித்ததையும் நொடித்ததையும் சொல்ல, எத்தனை பாட்டுகள்? ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்’ என்று கடவுளுக்கே சாபம் கொடுப்பார். தெய்வம் இருப்பது எங்கே?’ என்று கேள்வியும் கேட்பார். ‘தெய்வமே தெய்வமே’ என்பார். ‘கண்ணா கருமை நிறக்கண்ணா’ என்பார். ‘கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்’ என்று கிருஷ்ண தரிசனத்தில் திளைப்பார்.
‘உன்னை அறிந்தால்’ என்பார். ‘சட்டிசுட்டதடா’ என்பார். என்ன நினைத்து என்னை படைத்தாயோ என்று கேட்பார். சிறு இன்பம் போன்ற துன்பத்திலே இருவருமே நடந்தோம்’ என்பார். ‘காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி’ என்று கடவுளை கூண்டுக்குள் ஏற்றுவார்.
‘ஆறு மனமே ஆறு’ என்று வாழ்வின் தத்துவத்தை எளிமையாக எடுத்துரைப்பார். ‘பாதை வகுத்த பின் பயந்தென்ன லாபம், பயணம் நடத்திவிடு விலகிடும் பாவம்’ என்பார். ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு போடி தங்கச்சி... தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு’ என்பார். ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி, முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி’ என்பார்.
ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையில் எத்தனையெத்தனை சம்பவங்கள், தோல்விகள், சந்தோஷங்கள், வெற்றிகள், காயங்கள், அத்தனைக்கும் மருந்து போட்ட காரைக்குடி மருத்துவன் கண்ணதாசன். காலக்கணிதக்காரன் கண்ணதாசன். எம்ஜிஆர்- சிவாஜி காலத்தில், இவர்களையும் தாண்டி எல்லோராலும் நேசிக்கப்பட்ட கவிஞன் கண்ணதாசன்.
‘வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசி வரை யாரோ’ என்று எழுதிவைத்தார் கவியரசர். ஆனால், கடைசி வரை மனித வாழ்வில் உடன் வரும் கண்ணதாசனின் வரிகள்... சாகாவரம் பெற்ற வரிகள். காரணம்... சாகாவரம் பெற்ற கவிஞன்.
சிறுகூடல்பட்டியில் பிறக்கும்போது முத்தையா என்றும் பிறகு கண்ணதாசன் என்றும்... பிறக்கும் அந்த வீட்டுக்கும் ஊருக்கும் சொந்தம்... பிறகு இந்த உலகுக்கே... தமிழ் உலகுக்கே சொந்தம் என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது போலும்.