சுஜாதா இல்லாத ஷங்கர்;சக்கரம் இல்லாத வண்டி..!
லஞ்சம் வாங்குபவர்களை எல்லாம் கொல்ல ஆரம்பித்தால் என்னாகும் என்பது தான் இந்தியன் படத்தின் ப்ரிமைஸ்(Premise).
சினிமாவில் ஒருவரிக்கதை என்று கதையின் சாராம்சத்தை சொல்லுவார்கள். நம்மூர் சினிமா பாஷையில் 'நாட்'(Knot) அல்லது 'தாட்' (Thought) என்று சொல்லுவார்கள். ஹாலிவுட்டில் இது 'ப்ரிமைஸ்'. இதை சொன்னவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்களுக்கு வசனம் எழுதிய சுஜாதா தான். சங்கரின் வெற்றிக்கு ரங்கராஜன் எனும் சுஜாதா தான் காரணம் என்று சொன்னால் அது நிச்சயம் மிகையல்ல.எந்திரனின் பாதி கதைக்கு மேல் சுஜாதா இல்லை. அவ்விடத்தில் தான் இயக்குனர் சங்கரின் இறங்கு முகம் ஆரம்பமானது.
எந்திரனின் பாதி கதைக்கு மேல் சுஜாதா இல்லை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான் இதை எழுதினேன். சமீபத்தில் ஒருவர் சொன்ன தகவல்படி, 'அந்தப் படத்தின் வசனங்களை முழுவதும் எழுதிக் கொடுத்து விட்டு "என்னுடைய வேலை முடிந்தது " என்று ஒரு கட்டுரை கூட சுஜாதா எழுதினார். எந்திரன் படம் வெளியாகும் போது சுஜாதா மறைந்து விட்டார். அதில் சுஜாதாவிற்கு சமர்ப்பணம் அல்லது வணக்கம் என்று கூட போடாததற்கு காரணம் அதன் தயாரிப்பு நிறுவனமான சன் Pictures. அதன் MD, கலாநிதி மாறன் அதை செய்யவேண்டாம் என்று ஷங்கரிடம் தெரிவித்ததாக ஒரு தகவல் உண்டு.
சுஜாதா இல்லாத குறையை ஈடு செய்ய இயக்குனர் ஷங்கருக்கு பல டெக்னிஷியன்கள் தேவைப்பட்டனர். சுஜாதா இருந்திருந்தால், ஷங்கர் எடுத்த எல்லாப் படங்களிலும் லாஜிக்கும் இருந்திருக்கும். நெத்தியடி வசனங்களும் இருந்திருக்கும். இவ்வளவு ஏன் ஷங்கருக்கு அத்தனை டெக்னிஷியன்களின் தேவையும் இருந்திருக்காது. நச்சென்று கூற வேண்டும் என்றால் ஒரு சுஜாதா. இப்போது ஷங்கரிடம் இருக்கும் ஆயிரம் டெக்னிஷியன்களுக்கு சமம்.
இந்தியன் படத்தில் அவர் எழுதிய ஒவ்வொரு வசனமும் இன்றைய காலக்கட்டத்திற்கு கூட ஒத்துப்போகும்.இந்தியன் படம் மட்டும் அல்ல. சுஜாதா வசனமெழுதிய எல்லா திரைப் படங்களுக்கும் இது பொருந்தும். அந்த 'நெட்டையான மனிதர்' ஒரு தீர்க்கதரிசி என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை.
"கவர்ல அமௌண்ட் வச்சு கொடுக்கறத்துக்கு பேர் தான் கவர்மெண்ட்"
"பக்கத்துல இருக்கிற குட்டி குட்டி நாடெல்லாம் எங்கேயோ போயிடுச்சி. ஆனா இந்தியா இன்னும் அப்படியே இருக்கு.. ஏன்? ஏன்னா அங்கெல்லாம் கடமையை மீறுவதற்குத் தான் லஞ்சம். இங்க மட்டும் தான் கடமையைச் செய்வதற்கே லஞ்சம்"
"எல்லாத்துக்கும் குறுக்கு வழியை யோசிச்சு யோசிச்சு இப்போ இந்தியாவில் எல்லா பக்கமும் குறுக்கு வழிகளாயிடுச்சி" இது போன்ற நச் வசனங்கள் எல்லாம் இன்னொரு சுஜாதா வந்தால் மட்டுமே சாத்தியம். சுஜாதா இல்லாத ஷங்கர் - சக்கரம் இல்லாத வண்டி.
Credits: @Ragavendhran Balakrishnan