HBD Santhosh Narayanan, மெலடி, துள்ளல் எதுவானாலும் கோலிவுட்டின் கானா நம்ம ச.நா

தனித்துவமான தனது இசையால் ரசிகர்களின் மனதை கவர்ந்த சந்தோஷ் நாராயணன் இன்று மே 15 தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

Update: 2023-05-15 09:10 GMT

பொறியியல் முடித்த பட்டதாரியான சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் பல இசையமைப்பாளர்களிடம் இசை பொறியாளராக பணியாற்றி உள்ளார். அந்த வகையில் ஏ ஆர் ரஹ்மானிடம் குரு திரைப்படத்தில் சில பாடல்களில் பணியாற்றிய சந்தோஷ் நாராயணன். இதுவரை 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் அனைத்து திரைப்படத்திலும் பெயர் சொல்லும்படியான வெற்றியை பதிவு செய்துள்ளார்.


2012-ல் வெளியான இயக்குநர் பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் ஹிட். ஆடி போனா ஆவணி போன்ற ஆட்டம்போட வைக்கும் ஒரு வைப் பாடல்கள் கொடுத்த அவர் ஆசை ஓர் புல்வெளி என மென்மையான மெலடி பாடல்கள் கொடுத்து மனதை கொள்ளையடித்து இருப்பார்.

அதே ஆண்டு வெளியான கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான சூது கவ்வும், குக்கூ போன்ற படங்கள் அவரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றன. குறிப்பாக குக்கூ படம் வெற்றி பெற்றதற்கு அதன் இனிமையான பாடல்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்படிப்பட்ட படத்துக்கேற்ற மண் மனம் சார்ந்த இசையைத் தந்திருப்பார் சந்தோஷ் நாராயணன்.

சந்தோஷ் நாராயணன் இயக்குநர்கள் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், ராஜுமுருகன், நலன் குமாரசாமி, மாரி செல்வராஜ் ஆகியோருக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக இருக்கிறார்.

சூது கவ்வும், எனக்குள் ஒருவன், காதலும் கடந்து போகும், பரியேறும் பெருமாள் என இப்படிப்பட்ட படங்களுக்கு சந்தோஷின் இசை பெரும் சக்தியாக இருந்துள்ளன.


அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கபாலி, காலா, விஜய்க்கு பைரவா, தனுஷுக்கு கொடி, வடசென்னை என சந்தோஷின் இசை அந்த நடிகர்களின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பாடல்கள் கொடுத்து இருப்பார்.

பெரும்பாலான பாடல்கள் இணையத்தில் கோடி பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக மேகமோ அவள், கண்ணம்மா, ஆகாயம் தீப்பிடிச்சா மற்றும் பல பாடல்கள் மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் பிடித்துள்ளது.

குறிப்பாக 2016 ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மனிதன் படத்தில் இடம் பெற்றுள்ள அவள் பாடல் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதி காதல் பாடலாக உருவாகிய அவள் பாடல் வெளியான அன்றே நல்ல வரவேற்பை பெற்றது. பின் ஏழு வருடங்கள் கழித்து தற்போது அந்த பாடல் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்று வருகிறது.


தனுஷின் கர்ணன் படத்திலிருந்து வெளியான கண்டா வரச்சொல்லுங்க. கர்ணனை கையோட கூட்டி வாருங்க என்று கிடக்குழி மாரியம்மாளின் நாட்டுப்புறக் குரலோடு சேர்ந்து தனது இசையையும் குரலையும் சேர்த்து உயிரூட்டியிருப்பார் ச.நா. கும்மிருட்டில் பறையிசை அதிர பாடல் பதிவை நடத்தி பாராட்டுகளை குவித்தார் சந்தோஷ் நாராயணன்.

இசை குறித்த தனித்தன்மை வாய்ந்த அணுகுமுறையால் ரசிகர்களின் மனதை கவர்ந்த சந்தோஷ் நாராயணன் இன்று மே 15 தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

Tags:    

Similar News