தன்னலம் பார்க்காத கலைஞர் ராமமூர்த்தி..!

மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றால் உடனே தெரிந்து விடும்.

Update: 2024-05-25 08:22 GMT

மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி.

1922 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்த ராமமூர்த்தி பாரம்பரியமாகவே இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தையும், தாத்தாவும் வயலின் இசைக் கலைஞர்கள். சிறு வயதிலிருந்து வயலின் வாசிப்பதில் இவர் வல்லவர். முதலில் திரையுலகத்தில் நடிகராகத் தான் ராமமூர்த்தி நுழைந்துள்ளார். கோயம்புத்தூரில் கந்த லீலா என்ற படத்திற்கு வயலின் வாசிப்பதற்காகத் தனது தந்தையுடன் சென்ற இவருக்கு அங்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிறு சிறு வேடங்களில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் வயலின் வாசிப்பதில் தான் இவருக்கு ஆர்வம் இருந்துள்ளது. இவரது திறமையைக் கண்ட இசையமைப்பாளர் சி ஆர் சுப்பராமன் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

ராமமூர்த்தி போலவே எம்.எஸ் விஸ்வநாதனும் சில மாதங்களில் அவருடன் வந்து சேர்ந்தார். திடீரென சி ஆர் சுப்புராமன் இறந்து விட்டார். அவர் ஏற்கனவே சண்டி ராணி, தேவதாஸ், மணமகள் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைக்க ஒத்துக் கொண்டிருந்தார். அவர் இறந்து விட்ட காரணத்தினால் சிஷ்யர்களான எம் எஸ் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து அந்த படங்களை முடித்துக் கொடுத்தனர்.

அங்குத் தொடங்கியது இவர்களது பயணம், பணம் என்ற படத்தின் மூலம் இருவரையும் இசையமைக்க வைத்த கலைவாணர் என் எஸ் கே டைட்டிலில் விஸ்வநாதன் ராமமூர்த்தி எனப் பெயரைப் போட்டார். அதற்குப் பிறகு முடி சூடா மன்னர்களாக இசைப் பயணத்தில் இவர்கள் இருவரும் பயணம் செய்தனர்.

மெல்லிசை மன்னர்களாக மாறிய இருவரும் கூட்டணி சேர்ந்து 700 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 1964 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு இருவரும் பிரிந்தனர்.

சாது மிரண்டால் படத்தின் மூலம் 1966 ஆம் ஆண்டு ராமமூர்த்தி தனியாக இசையமைத்தார். இதுதான் இவர் முதலில் தனியாக இசையமைத்த திரைப்படம். அதற்குப் பிறகு பல படங்களுக்குத் தனியாக இசையமைத்தார். பின்னர் இலக்கியச் சோலை என்ற திரைப்படத்தின் மூலம் 1995ஆம் ஆண்டு விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் மீண்டும் கூட்டணி சேர்ந்தனர்.

தமிழ்நாடு அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது கலை வாழ்வுக்காக இவருக்கு வழங்கப்பட்டது. இதேபோல் 40-க்கும் மேற்பட்ட விருதுகளை ராமமூர்த்தி பெற்றுள்ளார். திரை இசை சக்கரவர்த்தி என்ற பட்டம் கொடுத்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இவருக்குப் பாராட்டு விழா நடத்தினார்.

ஜோடி சேர்ந்து மனக்கசப்பு இல்லாமல் 700 படங்களுக்கு மேல் இரண்டு கலைஞர்கள் பயணம் செய்தது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. தன்னுடைய புகழை பாராமல் கலைக்காக வாழ்ந்த மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் ராமமூர்த்தி.

Tags:    

Similar News