தமிழ் நடிகை திடீர் மாயம்: போலீசில் தாய் பரபரப்பு புகார்
தமிழ்நடிகை ஒருவர் திடீர் என்று மாயமாகி உள்ளார். அவரை கண்டுபிடித்து தர நடிகையின் தாய் போலீசில் புகார்அளித்துள்ளார்.;
நடிகை மீரா மிதுன்.
தமிழ்திரையுலகில் சர்ச்சைக்கும்,பரபரப்புக்கும் பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் வீடியோக்கள் அனைத்தும் பிரச்சனைக்கு உரியவைகளாகத்தான் இருக்கும். இவர் பிறந்தது சென்னையில் தான். சென்னையில் பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பையும் படித்தார். உயிரி தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இவர் கல்லூரி படிக்கும் போதே அழகி போட்டிகளில் கலந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார். மிஸ் தென் இந்தியா 2016 போட்டியில் வெற்றி பெற்றதும் அகில இந்திய அளவில் புகழ்பெற்றார். மேலும் இவர் மிஸ் தமிழ்நாடு 2016 பட்டம் பெற்றார். இதனால் விளம்பர நிறுவனங்கள் நடத்திய நிகழ்ச்சிகளில் மாடல் அழகியாக கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்தன. இதற்கிடையே இவர் மிஸ் தென் இந்தியா பட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட மிஸ் தென் இந்தியா பட்டம் போட்டி அமைப்பாளர்களால் திரும்பப் பெறப்பட்டது. இதற்கிடையே தமிழ் சினிமா படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மீரா மீதுனுக்கு வரத்தொடங்கின.
2017 ஆம் ஆண்டு ஸ்ரீ கணேஷ் இயக்கிய 8 தோட்டாக்கள் என்ற தமிழ்படத்தில் முதலில் அறிமுகம் ஆனார். அடுத்து சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார்.மேலும் சில தமிழ் படங்களில் மீரா மிதுன் நடித்தார். பிக்பாஸ் போட்டியாளராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அவருடைய ஆண் நண்பருடன் இணைந்து யூடியூப்-ல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோக்கள் வெளியிட்டார். நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் திரையுலகில் உள்ளவர்களை பற்றி அவதூறாக பேசி வீடியோக்கள் வெளியிட்டார். அவரால் விமர்சிக்கப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்தனர். சில நேரங்களில் போலீசாருக்கும் சவால் விட்டுப் பேசினார்.
இந்த நிலையில் தான் பட்டியலின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் மீரா மிதுன் பேசி வெளியிட்ட வீடியோவுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீதும் அவருடைய ஆண் நண்பர் சாம் அபிஷேக் மீதும் போலீஸ் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக மீரா மிதுன், அவர் நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். சில நாட்கள் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த வழக்கில் அவர்களுக்கு பின்னர் ஜாமீன் கிடைத்தது. இதற்கிடையே அவர்கள் இருவர் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு நடிகை மீரா மீதுன் கோர்ட்டில் ஆஜராகவில்லை. மீரா மிதுன் ஆஜராகாமல் தொடர்ந்து தவிர்த்து வந்ததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதாகவும், அவரது செல்போன் சுவிச்ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அவர் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிவிடுகிறார், அவர் எங்குள்ளார் என்று தெரியவில்லை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் நடிகை மீரா மிதுன் தாயார் சியாமளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், " தனது மகள் மீரா மிதுனை கடந்த சில நாட்களாக காணவில்லை. வழக்கை சந்தித்து வந்தபோதிலும், தொடர்ந்து எங்களிடம் தொடர்பில் இருந்தார். ஆனால் சில நாட்களாக தொலைபேசியிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதையும், அவரையும் கண்டுபிடித்துத் தாருங்கள்" என புகாரில் கூறியுள்ளார். மீரா மிதுன் மாயமாகிவிட்டார், அவரை காணவில்லை என அவருடைய தாயார் போலீசில் புகார் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.