மெய்யழகனுக்கு திருஷ்டி பொட்டு வையுங்க..!
படபடவென்று வெள்ளந்தியாக பேசி வெடிக்கும் கிராமத்துக்காரர் - சொற்களில் கஞ்சத்தனம் காட்டும் நகரத்து மனிதர்.
படபடவென்று வெள்ளந்தியாக பேசி வெடிக்கும் கிராமத்துக்காரர் - சொற்களில் கஞ்சத்தனம் காட்டும் நகரத்து மனிதர். இவர்களுக்கு இடையிலான பயணமும், நிகழ்வுகளும் தான் படத்தின் ஒன்லைன்.
பிறந்து, வாழ்ந்து, பழகி உறவாடிய தன் சொந்த மண்ணிலிருந்து சொத்து பிரச்சினை காரணமாக வீட்டை காலி செய்து குடும்பத்துடன் சென்னை வருகிறார் அருள்மொழி (அரவிந்த் சாமி). தன் தங்கையின் திருமணத்துக்காக 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்த ஊர் திரும்புகிறார்.
அங்கே ‘அத்தான் அத்தான்’ என உருகி அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து கவனிக்கிறார் கார்த்தி. அவர் யார், என்ன உறவு என்பதெல்லாம் அருள் மொழிக்குத் தெரியாது. அவர் பெயர் கூட தெரியாது. அவர் மனம் புண்படக் கூடாது என்பதால் தெரிந்தது போல் காட்டிக் கொள்கிறார். பெயரறியா ஒருவரின் அன்பு, அருள்மொழியை நிலை குலைத்து விடுகிறது. இறுதியில் அருள்மொழி தன் மீது அன்பு காட்டும் கார்த்தியின் பெயரை எப்படி அறிந்து கொள்கிறார்? இருவருக்குள்ளும் அப்படி என்ன உறவு என்பது படத்தின் மீதிக்கதை.
காலப்போக்கில் மறந்துபோன ஓர் உறவின் நெருக்கத்தை, மீட்டுருவாக்கம் செய்து புதுப்பிக்க ஓர் இரவு போதுமானது என்பதை அன்பால் நிறைத்திருக்கிறார் ‘96’ பட புகழ் இயக்குநர் பிரேம்குமார். ஊர் பாசமும், தொலைந்த தடங்களும், மீளும் கணங்களும், நெருக்கி அணைக்கும் உறவுகளும், அப்பாவி மனிதர்களும், வன்ம முகங்களை ‘லைவ் சவுண்ட்’ மூலம் யதார்த்துக்கு நெருக்கமாக படமாக்கியிருப்பது சிறப்பு.
குறிப்பாக அரவிந்த் சாமிக்கும் அவரது தங்கைக்குமான காட்சி கலங்க வைக்கிறது. மிக சாதாரணமான உரையாடல்களில் சில ஒன்லைன்களையும், கார்த்தி மூலம் கலகலப்பையும் சேர்த்து மெதுவாக நகரும் காட்சிகளை சோர்வடையாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குநர். வீடும், நிலமும், பறவைகளும், விலங்குகளும், சைக்கிளும் தனி கதாபாத்திரங்களாகவே படம் முழுக்க தொடர்வது இயக்குநர் டச். ‘96’பட போஸ்டர், தோனி பெயரை பச்சை குத்தியிருப்பது, பெரியார் புகைப்படம், கருப்பு பேட்ஜ் என கிடைத்த கேப்பில் பல ரெஃபரன்ஸ்கள்.
ஜல்லிக்கட்டு மூலம் கலாசாரத்தையும், அரசர்களின் வீரம் மூலம் வரலாற்றையும், நீடாமங்கலம் போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மூலம் துர்நிகழ்வுகளையும், இலங்கை போர் குறித்தும் பல விஷயங்களை படம் பேசுகிறது. ஆனால் உரையாடல்கள் வழியே கதைக்கு எந்த வகையிலும் பயனளிக்காத இந்த திணிப்புகள் ஓவர்டோஸ்! ஃபீல்குட் படத்தை கொடுக்க முயன்றியிருக்கும் இயக்குநர் அதற்கான தருணங்களை உருவாக்கி கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது.
அதேநேரத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் படம் நெடுக உரையாட்டிக் கொண்டே நாஸ்டால்ஜியா நினைவுகளை மீட்டுவது ‘நாங்களெல்லாம் அந்த காலத்துல..” என்பது போல ஒருகட்டத்தில் சோர்வளிக்கிறது. அருள்மொழி கதாபாத்திரம் குற்றவுணர்வுக்கு உள்ளாகி கூனிக்குறுகும் அளவுக்கு சொல்லப்படும் காரணம் அழுத்தமாக இல்லை. க்ளைமாக்ஸின் நீளம் அடுத்த பட ஷோவுக்கான டைமிங்கையும் சேர்த்து பறிக்கிறது. அத்தனை அழுத்தமான எமோஷனுடன் காட்சிப்படுத்தப்பட்ட தங்கை கதாபாத்திரம் இடைவேளைக்குப் பிறகு எங்கே என தெரியவில்லை.
மனதில் தேக்கி வைத்த உணர்வுகளை முக பாவனைகளில் கொண்டு வரும் கதாபாத்திரத்தில் ஆர்பாட்டமில்லாத அழுத்தமான நடிப்பால் கவர்கிறார் அரவிந்த்சாமி. சொந்த ஊரை மீண்டும் பார்க்கும்போது ஏற்படும் பரவசம், அளவிலா அன்புக்கு தகுதியானவரில்லை என்பதை உணரும்போது வெடித்து அழும் இடங்களில் கலங்கடிக்கிறார். வெள்ளந்தியான மனிதராக, அன்பின் உறைவிடமாக, சின்ன சின்ன உடல்மொழியில் கலகலப்பூட்டி ரசிக்க வைக்கிறார் கார்த்தி. இருவருக்குமான காம்போ நன்றாக பொருந்துகிறது.
சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டும் ஸ்ரீ திவ்யா கவனிக்க வைக்கிறார். மீசை முறுக்கி, தொடையை தட்டும் கிராமத்து ராஜ்கிரணை பார்த்து பழகியவர்களுக்கு சொக்கலிங்கம் கதாபாத்திரம் புதுசு. குலுங்கி அழும் ஒரே காட்சியில் தடம் பதிக்கிறார் ஜெயப்பிரகாஷ். தேவதர்ஷினி, ஸ்வாதி, சரண் சக்தி, கருணாகரன், இளவரசு தேவையான பங்களிப்பை செலுத்தியுள்ளனர்.
கோவிந்த் வசந்தா இசையில் உமாதேவி வரிகளில் கமல் குரலில் ஒலிக்கும் “யாரோ…இவன் யாரோ” பாடல் மொத்த திரையரங்கையும் அமைதிப்படுத்தி உருகவைக்கிறது. தஞ்சாவூரின் பசுமையையும், இரவின் நிசப்தம் அடங்கிய அழகையும் மகேந்திர ஜெயராஜுவின் கேமரா அழுகியலுடன் பதிவு செய்திருப்பது சிறந்த திரையனுபவம். லீனியர் கதையை நீட்டி சொல்லியிருப்பதில் கோவிந்தராஜ் கறார் காட்டியிருக்கலாம்.
ஃபீல்குட் முயற்சியில் அதீத உரையாடல்களும், திணிப்புகளும், நீட்டித்த க்ளைமாக்ஸும், மனிதேயம், வரலாறு, அரசியல், அன்பு, நிலம், உறவுகளின் பிணைப்பு என்ன எல்லாவற்றையும் ஒரே படத்தில் சொல்லியிருப்பதும் இயக்குநர் சொல்ல வருவதில் நிகழ்ந்த தடுமாற்றமும் மெய்யழகனுக்கான திருஷ்டிப் பொட்டு.