நடிகர் யோகி பாபு நடித்த தாதா திரைப்படத்தை வெளியிட தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..
நடிகர் யோகி பாபு நடித்துள்ள தாதா திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு, இயக்குநர் அமீர் நடித்த யோகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, நகைச்சுவை வேடங்களில் பிஸியான யோகி பாபு திடீரென நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் நயன்தாராவுடன் நடித்தார்.
மேலும், கூர்கா, தர்ம பிரபு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் யோகி பாபு நடித்தார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான மண்டேலா படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது, தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக யோகி பாபு வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த தாதா என்ற திரைப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. அந்தப் படத்தின் விளம்பர போஸ்டர்களில் யோகி பாபுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், சில காட்சிகளில் மட்டுமே அந்த படத்தில் நடித்து உள்ளதாக யோகி பாபு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு பதில் அளித்த தாதா படத்தின் தயாரிப்பாளர் படம் வெளியான பிறகே யோகி பாபு நான்கு காட்சிகளில் நடித்தாரா? 40 காட்சிகளில் நடித்தாரா? என தெரியவரும் என கூறி இருந்தார்.
இதற்கிடையே, மேலும் ஒரு பிரச்சினையாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர். சினி புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், அதன் நிர்வாகி துரைராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில் தான் ஒரு திரைப்பட இசையமைப்பாளர் என்றும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
மேலும், தனது நண்பருடன் இணைந்து ஆர்.ஆர். சினி புரடெக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி மணி (Money) என்ற திரைப்படத்தை தயாரித்ததாகவும், அந்தப் படத்தில் யோகி பாபு, நிதின் சத்யா, நாசர், சிங்கமுத்து, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த படம் திரைப்பட தணிக்கை வாரியத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டே தணிக்கை ஆனதாகவும் துரைராஜன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், படத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த கிஷோர் குமார் என்பவர், தனது தயாரிப்பு நிறுவனத்தில் 35 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் துரைராஜன் மனுவில் தெரிவித்து உள்ளார்.
மேலும், திரைப்படத்தின் ஹார்ட் டிஸ்கை திருடியது தொடர்பான ஒரு வழக்கும் விருகம்பாக்கம் காவல் நிலையத்நில் நிலுவையில் உள்ளதாகவும் துரைராஜன் தனது மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த நிலையில், அன்னை தெரசா இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், மணி என்ற தனது படத்தை, தான் தயாரித்ததாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த சிவில் வழக்கு நிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே, தற்போது அந்த கதையை தாதா என்ற பெயரில் மாற்றி, கிஷோர் குமார் வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும், அந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் துரை ராஜன் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், யோகி பாபு நடித்த தாதா படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு விசாரணையை 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும், இந்த வழக்கு குறித்து கிஷோர் குமார் பதில் அளிக்கவும் நீதிபதி சரவணன் உத்தரவிட்டு உள்ளார்.