'தங்கலான்' - கோலார் தங்கவயலின் உண்மையான வரலாறு..?!
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்துவரும் படத்தின் டைட்டில் 'தங்கலான்' இன்று வெளியாகியது.;
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படம், தீபாவளித் திரைப்படங்கள் வெளியான நிலையிலும் இன்னமும் ரசிகர்களின் வரவேற்புக்குரிய படமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரம் தனது நடிப்பின் மூலம் இன்றைய இளைய தலைமுறைக்கு அன்றைய ஆதித்த கரிகாலனை இப்படித்தான் என்று மனத்தில் உருவ ஓட்டத்தை நிலைபெறச் செய்திருப்பார். இந்த நிலையில், இந்த ஆண்டு நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு பெருமிதமும் மகிழ்வுமான ஆண்டாகவே மாறி உள்ளது. 'மகான்', 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' என தொடர்ந்து நடிகர் விக்ரமின் திறமையான நடிப்பைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில்தான், தீபாவளியை முன்னிட்டு நடிகர் விக்ரமின் அடுத்த படத்தின் அமர்க்களமான அப்டேட் வெளியாகி உள்ளது. ஆம். இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் 'சியான் 61' படத்திற்கு 'தங்கலான்' என்கிற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'கே.ஜி.எஃப்' கதையின் உண்மையான வரலாற்றை மையமாக வைத்து 3டியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் நடிகர் விக்ரம், 'மருதநாயகம்' படத்தில் நடிகர் கமல்ஹாசன் தோன்றுவது போன்ற தோற்றத்தில் இருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 'கே.ஜி.எஃப்' எனப்படும் கோலார் தங்கச் சுரங்கத்தின் உண்மை வரலாற்றை படமாக இயக்கப் போகிறேன் என இயக்குநர் பா. ரஞ்சித் சொன்னதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் ஏராளமான எதிர்பார்ப்பு எகிறியது. இந்தநிலையில், நடிகர் விக்ரமை வைத்து இப்படியொரு டைட்டிலில் தரமான இன்ப அதிர்ச்சியை அளிப்பார் இயக்குநர் பா.ரஞ்சித் என்று ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத நிலையில், 'தங்கலான்' அறிமுக டீசரே வெளியாகி உள்ளது.
தமிழ்த் திரையில் 'பேட்ட' படத்தின் மூலம் அறிமுகமான மலையாள நடிகை மாளவிகா மோகனன் விஜய்யின் 'மாஸ்டர்', தனுஷின் 'மாறன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அடுத்து, தமிழில் எந்த நாயகனுடன் அவர் நடிக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், நடிகர் விக்ரமுடன் நாயகியாக 'தங்கலான்' படத்தில் அவர் நடித்து வருகிறார் என்கிற அறிவிப்பும் டீசரில் அவரது தோற்றமும் வெளியாகி உள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் இந்தப் படத்தில் மலையாள நடிகை பார்வதியும் நடித்துள்ளார். அவரது மிரட்டலான காட்சிகளும் டைட்டில் டீசரில் வெளியாகி உள்ளது. சுதந்திர போராட்டக் காலக்கட்டத்தில் கோலாரில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்து அசத்திய பசுபதி, இப்படத்தில் நாமம் போட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எப்படியும் அவர் வில்லனாகத்தான் இருப்பார் என்றும் சர்ச்சைகளுக்கும் இந்தப் படம் வழிவகுக்கும் என்றும் இப்போதே பல்வேறு கருத்துகள் பரவலாகப் பேசத்தொடங்கிவிட்டன.
மேலாடை அணியாமல் வேட்டியை வெறும் கோவணம் போல ஏத்தி கட்டிக் கொண்டு கையில் ஆயுதத்தை ஏந்தி, நடிகர் விக்ரம் டீசரில் இடம்பெற்றதைப் பார்த்த ரசிகர்கள் அப்படியே 'மருதநாயகம்' படத்தில் உள்ள கமலின் தோற்றம் போலவே, இப்படத்தில் விக்ரம் இருக்கிறார் என்று சமூக வலைத் தளங்களில் ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளிவிட்டு வருகின்றனர்.
ஹாலிவுட் படமான 'அப்போகலிப்டோ' போல இந்தப் படம் வெளியானால் நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது உறுதி என்றும், பார்க்க கொஞ்சம் பாலாவின் 'பரதேசி' படத்தின் சாயலும் இருப்பதாக கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. 'தங்கலான்' படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ள நிலையில், அதன் படப்பிடிப்பு ஆரம்பம் என்கிற அறிவிப்பையே இத்தனை பிரமாண்டமாக வெளியிட்டுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். இதனால் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் உள்ளனர்.