இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படம் வாழை... படப்பிடிப்பு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று துவக்கம்
திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் வாழை படத்தின் படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் கிளாப் செய்து தொடங்கி வைத்தார்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் உதவியாளாரக இருந்த மாரி செல்வராஜிக்கு அந்தப் படம் பல்வேறு விருதுகளை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மாரி செல்வராஜிக்கு பாராட்டுகள் குவிந்தது. இதையெடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மாமன்னன் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், வைகைப்புயல் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாழை என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை டிஸ்டினி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இதில், நவ்வி ஸ்டூடியோ இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜின் சொந்த நிறுவனம் ஆகும். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில் "வாழை" திரைப்படத்தின் தொடக்க விழா, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கிளாப் செய்து படப்பிடிப்பினை தொடங்கி வைத்தார்.
வாழை திரைப்படத்தில் படப்பிடிப்பை கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் தொடங்கி வைத்தது குறித்து, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தனது டுவிட்டர் பக்கத்தில், சிறந்த கலைப்படைப்புகளை வெகுஜன மக்களும் விரும்பி கொண்டாடும் வகையில் வழங்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பான வாழை படத்தின் படப்பிடிப்பை தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதற்கு பதில் அளித்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், அன்பும், நன்றியும் உதயநிதி ஸ்டாலின் சார் என தனது டுவிட்டர் பக்தத்தில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தொடக்க விழா நிகழ்ச்சியில், நடிகர் கலையரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இருப்பினும், மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
கிராம மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் இந்தப் படம், தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரில் மூன்று சிறுவர்கள் வாழைத் தோட்டத்தின் அருகே அமர்ந்து இருப்பது போலவும், ஒரு சிறுவன் தனது தோளில் அரிவாளை தொங்கவிட்டபடி நிற்பது போன்றும் உள்ளது.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தைப் போல இந்தப் படமும் சாதிய பாகுபாடு குறித்து பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிப்பதால் இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் திரையுல வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.