நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நடிகர் விஷாலூக்கு நீதிபதி அதிரடி உத்தரவு
நடிகர் விஷால் செப்டம்பர் 22ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற அதிரடி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு,செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன, சொத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஷால் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை, அதேசமயம், நான்கு வங்கி கணக்குகளின் விவரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்தின் விவரங்களின் ஆவணங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. இதனால், நடிகர் விஷால் செப்டம்பர் 22ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.
இதற்கிடையே, நடிகர் விஷால் தரப்பு வழக்கறிஞர், விஷால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ஆஷா செப்டம்பர் 22ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.