சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த தினம் இன்று

படத்துக்குப் பூஜை போடும்போதே, பட ரிலீஸ் தேதியை அறிவித்து, படத்தை வெளியிட்டு காண்பித்தவர் சாண்டோ சின்னப்பா தேவர்.;

Update: 2021-06-28 02:57 GMT

சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த தினம்

1915ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி பிறந்த சின்னப்பா தேவருக்கு இன்று 106 வது பிறந்தநாள்.

பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் என்றாலும் வளர்ந்தது கோவையில்தான். வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பத்தில் மில் வேலை உட்பட பல வேலைகளைச் செய்தார். சின்னச்சின்னதாக தொழில்கள் செய்தார். சகோதரர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சிக் கூடம் வைத்திருந்தார்.

அப்போது கோவையில்தான் இருந்தது ஜூபிடர் ஸ்டூடியோ. இந்த நிறுவனத்தில் மாதச் சம்பளத்துக்கு நடித்தவர்களில் ஒருசிலர், இவரின் உடற்பயிற்சிக் கூடத்துக்கு வந்தார்கள். பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கட்டுமஸ்தான உடம்பு கொண்ட சின்னப்பா தேவருக்கு, ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மெல்ல மெல்ல திரைத்துறையில் ஆர்வம் வந்தது. அந்த சமயத்தில், கிடைத்த நடிகருடனான நட்பு, மரணிக்கும் வரை நீடித்தது. அதுமட்டுமல்ல... திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றிக்கும் வித்திட்டது. சின்னப்பா தேவருக்கு அப்படிக் கிடைத்த நண்பர் தான் எம்ஜிஆர்.

சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார் தேவர். 'சொந்தமாக படமெடுத்தால் என்ன' எனும் எண்ணம் தோன்றியது. நண்பர்கள் கையிலிருந்த பணத்தைக் கொடுத்து உதவினார்கள். 'தேவர் பிலிம்ஸ்' உருவானது. எம்ஜிஆரை ஹீரோவாக்கினார். பானுமதி, கண்ணாம்பா முதலானோர் நடித்த 'தாய்க்குப் பின் தாரம்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

முதல் படத்தில் 'மாடு' பிரதானக் காட்சியில் இடம்பிடித்து மிரட்டியெடுத்தது. பின்னர், சிங்கம், புலி, யானை உள்ளிட்ட பல மிருகங்களை படத்தில் கொண்டுவந்தார் என்பது தனிக்கதை. 'தேவர் பிலிம்ஸா... மிருகங்களை வைச்சு அசத்துவாங்களேப்பா' என்று எல்லோரும் சொல்லும் அளவுக்கு தனி அடையாளத்துடன் திகழ்ந்தார்.

முதல் படம் எம்ஜிஆருடன். ஆனால் இருவருக்கும் முட்டிக்கொண்டது. ஒருவழியாக படத்தை எடுத்து முடித்து, ரிலீஸ் செய்து, வெற்றிப் படமாகவும் அமைந்தது. பின்னர் ஒருவழியாக எம்ஜிஆரும் சின்னப்பா தேவரும் பிணக்கில் இருந்து வெளிவந்தார்கள். பழைய நட்பு இன்னும் கெட்டிப்பட்டது. 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக் காத்த தனயன்' என்று தொடர்ந்து படங்கள் பண்ணினார்கள். எல்லாமே ஹிட்டடித்தன.

சிவாஜியை வைத்து ஏ.பீம்சிங் 'ப' வரிசை படங்களை இயக்கினார் என்றால், சின்னப்பா தேவர் எம்ஜிஆரை வைத்து 'த' வரிசைப் படங்களை தயாரித்தார். தன் படங்களுக்கென கதை இலாகாவை உருவாக்கினார். டைட்டிலில் 'தேவர் பிலிம்ஸ் கதை இலாகா' என்றே வெளிவரும். இசைக்கு கே.வி.மகாதேவன். பாடலுக்கு கண்ணதாசன். இயக்கத்துக்கு சகோதரர் எம்.ஏ.திருமுகம். பாட்டெல்லாம் ஹிட்டாகின.

குழுவினரை அழைத்து கதை உருவாக்கச் சொல்லுவார். கதை இவருக்குப் பிடித்திருந்தால்தான் அடுத்தக்கட்டத்துக்குச் செல்வார். இல்லையெனில் மீண்டும் கதை உருவாக்கும் வேலை தொடங்கிவிடும். அந்தக் கதையில், எம்ஜிஆருக்கென சின்னச்சின்ன விஷயங்கள் சேர்க்கப்படும். எல்லோரும் பார்க்கும்படியான கதையாக அமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சென்டிமென்ட்டுகள் கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும்.

எம்ஜிஆருக்குச் தகவல் சொல்லப்படும். கால்ஷீட் கொடுப்பார். பூஜை தேதி அறிவிக்கப்படும். பூஜையின் போதே, ரிலீஸ் தேதியும் தைரியமாக அறிவித்துவிட்டுதான் வேலையில் இறங்குவார். சொன்ன தேதியில் ரிலீஸ் செய்தும்விடுவார். இதைக் கண்டு வியக்காத தயாரிப்பாளர்களே இல்லை.

இந்தித் திரைப்படத்துக்காக, 'ஹாத்தி மேரா சாத்தி' படத்துக்காக ராஜேஷ்கண்ணாவிடம் கதையைச் சொல்லி, சம்மதம் வாங்கினார் தேவர். இத்தனைக்கும் தேவருக்கு இந்தியெல்லாம் தெரியாது. அதேபோல், ராஜேஷ்கண்ணா தேவரின் செயலைக் கண்டு மிரண்டுபோனாராம். படத்துக்கு சம்பளம் சொன்னதும், அந்தத் தொகை முழுவதையும் கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக்கில் இருந்து எடுத்துக் கொடுத்தாராம். காசோலை பயன்படுத்தமாட்டார் தேவர் என்றும் நீண்டகாலமாக வங்கியில் கணக்கு கூட வைத்துக் கொள்ளவில்லை என்றும் சொல்லுவார்கள்.

எம்ஜிஆரும் தேவரும் நகமும் சதையும் போல. அப்படியொரு நட்பு இருவருக்கும். ஆனாலும் உடம்பு முழுக்க சந்தனமும் நெற்றி நிறைய விபூதியும் பூசிக்கொண்டிருக்கும் தேவர், எம்ஜிஆரை, 'ஆண்டவரே' என்றுதான் அழைப்பார். எத்தனையோ பேருக்கு வள்ளலென வாரிவாரிக் கொடுத்த எம்ஜிஆர், சின்னப்பா தேவரை 'முதலாளி' என்றுதான் கூப்பிடுவார்.

தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடிக்கிறார் என்றாலே, விநியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் ரசிகர்களும் குஷியாகிவிடுவார்கள். அந்த அளவுக்கு இந்தக் கூட்டணி மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

பார்ப்பதற்கு பயில்வான் போல், கொஞ்சம் முரட்டு ஆசாமியாகவும் கறார் பேர்வழியாக இருந்தாலும் சிறந்த பக்திமானாகவும் திகழ்ந்தார் சின்னப்பா தேவர். மிகச்சிறந்த முருகபக்தர். அதிலும் மருதமலை முருகன் மீது அப்படியொரு பக்தி கொண்டிருந்தவர். வார்த்தைக்கு வார்த்தை 'முருகா முருகா' என்று சொல்லிக் கொண்டே இருப்பார். மருதமலை கோயிலுக்கு கணக்கிலடங்காத அளவுக்கு திருப்பணிகள் செய்திருக்கிறார். சொல்லப்போனால், மருதமலை முருகன் கோயில் இன்றைக்கு பிரசித்தமாகியிருப்பதற்கு, சின்னப்பாதேவர்தான் காரணம்.


கோவையில் மிகப்பெரிய விநியோகஸ்தர் அவர். தேவரின் படங்களை தொடர்ந்து அவர்தான் அந்தப் பகுதியில் ரிலீஸ் செய்து வந்தார். ஒருநாள் அவரை தேவர் போனில் அழைத்தார். 'இப்போ எடுத்திட்டிருக்கிற படத்துக்கு நீங்க பணம் எதுவும் தரவேணாம். அதுக்கு பதிலா ஒண்ணு செய்யணும்' என்றார். 'சொல்லுங்க முதலாளி' என்றார். 'மருதமலைக்குப் போறதுக்கு ஒரு ரோடு போட்டுக் கொடுங்க போதும்' என்றார் தேவர். அப்படித்தான் கோயில் பிரபலமானது.

''உழைப்பால் உயர்ந்தவர் சின்னப்பா தேவர். தானும் உயர்ந்து, பிறரையும் உயர்த்தியவர். யாருக்கெல்லாம் முடியுமோ, யாரெல்லாம் உதவி என்று கேட்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அள்ளிக்கொடுத்தவர். எல்லோருக்கும் நம்பிக்கையுடன் நடந்துகொள்வார். மிகவும் நாணயமாக வாழ்ந்தார். இனி அவரைப் போல ஒருவரைப் பார்க்கவே முடியாது. அப்பேர்ப்பட்ட உத்தமர் அவர்'' என்று சின்னப்பா தேவரின் மரணத்தின் போது நெகிழ்ந்து உருகிச் சொன்னார் எம்ஜிஆர்.

தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, தனக்கென, தன் படங்களுக்கென ஒரு பாணியை கட்டமைத்து, திரையுலகில் அழியாப் புகழ் பெற்ற சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவருக்கு இன்று பிறந்தநாள்-சின்னப்பா தேவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

Tags:    

Similar News