கறுப்பு-வெள்ளை காலத்து கனவுக் கன்னி..!

பொறுப்பு மிக்க பாத்திரங்களின் பொருத்தமான நாயகி. நடிப்புலகின் வானத்தில் ஒளிர்ந்த ஒரு தாரகை.

Update: 2024-08-30 05:06 GMT

கருப்பு வெள்ளை காலத்து கனவுக்கன்னி தேவிகா.

மடிமீது தலை வைத்து இருவரும் படுக்க முடியுமா? என்ற விடையில்லா கேள்விகளை விதைத்த மோகன நடிகை. கடைக்கோடி ரசிகரகளை கவர்ந்தவர் தேவிகா. நடிப்புச் சுமைதாங்கி. தேவிகா.

ஸ்ரீதரின் நம்பிக்கையைப் பெற்ற நட்சத்திரங்களில் ஒருவர் தேவிகா. ஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் சோகச் சுமையை ஏற்றி வைத்தது கல்யாண்குமார் – தேவிகா ஜோடி. அந்த இணைக்கு ரசிகர்கள் கொடுத்த இடத்தைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், அவர்களை அடுத்த ஆண்டே ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் மீண்டும் இணைத்தார். அந்தப் படமும் மாபெரும் வெற்றிபெற்றது. ஸ்ரீதர் இயக்கத்தில் அடுத்து தேவிகா நடித்த ‘சுமைதாங்கி’ படமும் மறக்க முடியாத படமானது.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் உருவான பல பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத அமரத்துவம் பெற்றவை. தேவிகா நடித்த பெரும்பான்மையான படங்களில் இந்த மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் அமைந்துபோயின. “ நான் பாட வைத்தது சுசீலாவையா இல்லை தேவிகாவையா?” என்று எம்.எஸ்.வி.யே வியந்து கேட்கும் அளவுக்குப் பாடல்களுக்குத் தேவிகா வாயசைக்கிறாரா அல்லது நேரடியாகப் பாடுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்தது. அந்த அளவுக்குச் சிறப்பான தொரு நடிப்பைப் படத்திற்குப் படம் வெளிப்படுத்தினார் தேவிகா.


நாட்டியப் பேரொளி பத்மினியும், நடிகையர் திலகம் சாவித்திரியும் நீயா, நானாப் போட்டியிட்டு வந்த 60களில் தனக்கு யாரும் போட்டியில்லை என்று தனித்து வெற்றிக்கொடி நாட்டியவர் தேவிகா. தெலுங்கு தேசத்திலிருந்து தமிழுக்கு வந்த அவர், இரு மொழிகளிலும் சுமார் 150 படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தேவிகா என்ற நட்சத்திரத்தின் ஒளிவட்டம் இல்லாமல் கதாபாத்திரமாகக் கூடு பாய்ந்துவிடும் மாயத்தைச் செய்து காட்டினார்.

முதலாளி படத்தில் எளிய குடும்பத்தின் வள்ளி என்ற பெண்ணாகத் தோன்றிய தேவிகாவின் அழகில் சொக்கிப்போனார்கள் அன்றைய ரசிகர்கள். ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ என்று டி.எம்.எஸ் கம்பீரமாகப் பாடிய பாடலுக்கு எஸ்.எஸ். ராஜேந்திரன் ரொமாண்டிக் நடிப்பில் பின்ன, அந்தப் பாடலில் தேவிகா காட்டும் வெட்க அழகுக்குக் கொட்டிக் கொடுக்கலாம். அதே படத்தில் வரும் ‘குங்குமப் போட்டுக்காரா..’ பாடலில் காதலனைப் பகடிசெய்யும் சுட்டித்தனம் எந்தப் பெண் நட்சத்திரத்தையும் நினைவூட்டாத தனி வண்ணம் கொண்டது.

“சொன்னது நீதானா” “கங்கை கரைத் தோட்டம்”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “அமைதியான நதியினிலே”, “அலையே வா... அருகே வா”, “பாலிருக்கும் பழமிருக்கும்”, “கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே”, “இரவும் நிலவும் வளரட்டுமே”, “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு”, “ சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?” போன்ற பாடல்களுக்கு அவர் காட்டும் முக நடிப்பில் சொக்கிப்போகாத ரசிகர்களே இருக்க முடியாது.

பிரமீளா தேவி என்ற இயற்பெயருடன் ‘நாட்டிய தாரா’ என்ற தெலுங்குப் படத்தில் 1956-ல் 15 வயதில் அறிமுகமாகியிருந்தார் தேவிகா. அதே ஆண்டு பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா தயாரித்து இயக்கிய ‘மணமகன் தேவை’ படத்துக்கு இரண்டாவது கதாநாயகி தேவைப்பட்டார். படத்தின் நாயகன் சிவாஜி. நாயகி பானுமதி. இரண்டாவது கதாநாயகியைத் தேர்வு செய்யும் பொறுப்பை மனைவி பானுமதியிடம் ஒப்படைத்தார் இயக்குநர்.

அன்று பானுமதியின் சாய்ஸாக இருந்தவர் பிரமீளா தேவிதான். அந்தப் படத்தில் நடித்தபோது பானுமதி தந்த அறிவுரையை ஏற்று நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்தி வந்த ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக் குழுவில் சேர்ந்தார். சினிமாவில் நடித்துவிட்டு மேடை நாடகத்துக்குச் செல்வதாவது என்று நினைக்காமல் முத்துராமனுடன் இணைந்து நாடகத்தில் நடித்தார். நாடகத்தில் பிரமிளா தேவியைப் பார்த்த பட அதிபர் எம்.ஏ. வேணு முதல் முழுநீளக் கதாநாயகி வாய்ப்பைக் கொடுத்தார்.

முக்தா வி. சினிவாசன் இயக்குநராக அறிமுகமான அந்தப் படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடித்தார். 1957-ம் வருடம் தீபாவளிக்கு வெளிவந்த இப்படம், ஜெமினி - சாவித்ரி நடிப்பில் வெளியான சௌபாக்கியவதி படத்தை வசூலில் தோற்கடித்தது. சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. பிரமிளா தேவி என்ற பெயரையும் தேவிகா என்று மாற்றிக் கொண்டார். அந்தப் படம் தான் ‘முதலாளி’. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்த தேவிகா, சிவாஜி கணேசன் ஜோடியாகப் பல படங்களில் இணைந்து நடித்தார்.

‘பாவமன்னிப்பு’, ‘பந்தபாசம்’, ‘அன்னை இல்லம்’, ‘குலமகள் ராதை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சாந்தி’, ‘நீலவானம்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நீலவானம் படத்தில் அன்று தேவிகாவின் நடிப்பைப் புகழாத பத்திரிகைகளே இல்லை.

கர்ணன் படத்தில் கர்ணம் குருசேஷத்திரப் போர்க் களத்துக்குப் புறப்படும் காட்சியில் மஞ்சள் நிறப் பட்டாடையில் நீராடிய கூந்தலைத் தளையவிட்டபடி தேவிகா வரும் அழகே தனி. ஆனால் அந்தக் காட்சியில் தேவிகா காட்டும் தவிப்பு இன்று பார்த்தாலும் பதறவைக்கும். நடிகர் திலகத்தோடு மட்டுமல்ல ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட அன்றைய முன்னணிக் கதாநாயகர்கள் பலருடனும் இணைந்து நடித்த தேவிகா, எம்.ஜி. ஆருடன் ‘ஆனந்த ஜோதி’ என்ற ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தார். அதில் சிறுவன் கமலஹாஸன் நடித்திருந்தார்.

இயக்குநர் பீம்சிங்கிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தேவதாஸுக்கும் தேவிகாவுக்கும் காதல் பிறந்தது. 1972-ம் ஆண்டு வாழ்விலும் இணைந்தது இந்த ஜோடி. தேவதாஸ் - தேவிகா தம்பதியின் ஒரே மகள் நடிகை கனகா.

தனது கணவரை இயக்குநர் ஆவதற்காக ‘வெகுளிப்பெண்’ என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார் தேவிகா. அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க தேவிகாவுக்கு வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் கடைசிவரை கதாநாயகியாகவே வாழ்ந்து கடந்த 2002-ல் மறைந்த தேவிகா, குடும்பப் பாங்கான நாடகத் தன்மை மிகுந்த கதைகளில் நடிப்புச்சுமை மிகுந்த கதாபாத்திரங்களைத் தன் தோள்களில் தாங்கிய சுமைதாங்கியாக வலம் வந்தார்.

Tags:    

Similar News