மகனுடன் வெற்றியை கொண்டாடிய பிக்பாஸ் சீசன் 6 வின்னர் அசீம்
தன் மகன் ரயானை சந்தித்து வெற்றியை கொண்டாடிய அசீம்“எனது உயரம் உனது இலக்கல்ல... நீ உயரனும் என்பதே என் இலக்கு” என ட்வீட் செய்துள்ளார்;
பிக்பாஸ் சீசன் 6-ல் வெற்றிபெற்ற பின் தன் மகன் ரயானை சந்தித்து அவனுடன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அசீம்.
பிக் பாஸ் சீசன் 6 ஒரு வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. மக்கள் மனதை வென்று அதிக வாக்குகள் பெற்றவர் என்ற அடிப்படையில் அசீமுக்கு டைட்டில் பட்டம் கிடைத்தது.
சின்னத்திரை சீரியல்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் அசீம். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட அசீம், கடந்த அக்டோபர் மாதம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்த 106 நாட்களில் பல்வேறு சண்டை, சர்ச்சைகள் என அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி கண்டார்.
அசீமின் வெற்றி அவருக்கு மகிழ்ச்சியை தந்தாலும், பிக்பாஸ் ரசிகர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பிக்பாஸ் 6 ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பிற போட்டியாளர்களை தரக்குறைவாக பேசி, அவர்களிடம் சண்டையிட்டு வந்த ஒருவருக்கு எப்படி டைட்டிலை கொடுத்தார்கள் என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. சிலரோ இனி பிக்பாஸே பார்க்க போவதில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக பதிவிட்டு வருகின்றனர்.
டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற அசீமுக்கு, 50 லட்சம் ரூபாய் பணத்தையும், ஆடம்பர காரையும் பரிசாக வழங்கினர்.
இவருக்கு ஒரு நாளுக்கு 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி 105 நாட்களுக்கு மொத்தமாக 23 லட்சத்துக்கு மேல் அவருக்கு சம்பளம் கிடைத்திருக்கும். மேலும் டைட்டிலை தட்டிச் சென்றால் 50 லட்சமும் சேர்த்து, ரூ. 73 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
அசீமின் வெற்றி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அவர் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெற்றியை கொண்டாடி வருகிறார். வெற்றிபெற்ற பின் தன் மகன் ரயானை சந்தித்து அவனுடன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். தனது மகனுக்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக ஆரம்பத்தில் அசீம் தெரிவித்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது
மகனின் கையில் பிக்பாஸ் கோப்பையையும், ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் கொடுத்து மகிழ்ந்த அசீம், அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "எனது உயரம் உனது இலக்கல்ல... நீ உயரனும் என்பதே என் இலக்கு..! இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம் என் செல்லமே" என உருக்கமாக பதிவிட்டுள்ளார் அசீம். அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
முன்னதாக அசீம், பிக் பாஸ் வீட்டில் உள்ள கேமரா மற்றும் கமல் ஹாசனிடமும் தன்னுடைய மகன் மேலே உள்ள பாசத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது என கூறினார். அவருடைய மகனை பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வருவார்கள் என கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை