கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!

சென்னை காசி திரையரங்கில் கில்லி பட பேனரைக் கிழித்த வீடியோ வைரலான நிலையில், விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு அஜித் ரசிகர் வீடியோ வெளியிட்டுள்ளார்.;

Update: 2024-05-02 06:14 GMT

கில்லி பட போஸ்டரை கிழித்ததற்கு மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர் 

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை முன்னிட்டு எந்த புதிய படங்களும் வெளிவராமல் உள்ளது. அதுமட்டுமின்றி புதுப்படங்களுக்குப் பெரிதளவில் கிடைக்காத வரவேற்பு, ரீ ரிலிஸாகும் படங்களுக்குக் கிடைத்து வருகிறது. இதனால், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் படங்களை ரீ ரிலிஸ் செய்யும் மும்முரத்தில் உள்ளனர்.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி விஜய், த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான 'கில்லி' ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கில்லி திரைப்படம் வெளியாகி வசூலைக் குவித்துள்ளது. இதற்கிடையே மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான 'தீனா'  திரைப்படம் ரீ ரிலிஸ் செய்யத் திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று அஜித்தின் தீனா திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டது. அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இப்படத்தை அஜித் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அப்போது, காசி திரையரங்கில் அஜித் ரசிகர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பைக் சாவியைக் கொண்டு திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த கில்லி பட போஸ்டரை கிழித்தார். அந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த இளைஞரைக் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ள அவர், மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "காசி திரையரங்கில் தீனா படம் பார்க்கச் சென்ற போது, அங்கு கில்லி பட பேனர் இருந்தது. அப்போது நண்பர்களுடன் சேர்ந்து ஏதோ ஒரு ஆர்வத்தில் பைக் சாவியைக் கொண்டு பேனரைக் கிழித்து விட்டேன். அதற்காக நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழக நண்பர் மற்றும் விஜய் ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டேன்" என இளைஞர் மன்னிப்புக் கேட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News