'மாமன்னன்' படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு..!

Vadivelu Birthday -நடிகர் வடிவேலு, நீண்ட நாட்களுக்குப்பிறகு, மீண்டும் நடிக்கும் 'மாமன்னன்' படக்குழுவினருடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.;

Update: 2022-09-13 02:06 GMT

படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு.

Vadivelu Birthday -இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடிக்க, உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக வேகமாக வளர்ந்து வரும் படம் 'மாமன்னன்'.

இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு, நகைச்சுவை நாயகனாக, மீண்டும் களம் இறங்குகிறார். இந்தப் படத்தில் உதயநிதியின் தந்தையாக அவர் நடித்து வருவதாகத் தெரிய வருகிறது. ஏற்கெனவே, இயக்குநர் மாரி செல்வராஜ், தான் வடிவேலுவின் மிகச்சிறந்த ரசிகன் என்றும் அவரை இயக்குவது தன்னுடைய கனவு என்றும் அது தற்போது நனவாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இன்றைய தினம்(12/09/2022) வைகைப் புயல் வடிவேலு பிறந்தநாளை படக்குழு வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளது. உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி தமிழ் குமரன் மற்றும் 'மாமன்னன்' படக்குழுவினருடன் இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வடிவேலு கலந்துகொண்டார்.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, பிரம்மாண்டமான கேக் வரவழைக்கப்பட்டது. அந்தக் கேக்கை வெட்டிய வடிவேலு, உதயநிதி உள்ளிட்டவர்களுக்கு ஊட்டினார். வடிவேலுவுக்கு படக்குழுவினர் மாலை அணிவித்தும் பூங்கொத்துகளைக் கொடுத்தும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News