முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நடிகர் சூர்யா: ஓ, இதுதான் விஷயமா?

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த நடிகர் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர், இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக, ரூ. 1 கோடி நிதியை வழங்கினர்.;

Update: 2021-11-01 11:15 GMT

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ஒரு கோடி ரூபாய் நிதியை வழங்கிய நடிகர் சூர்யா. 

நடிகர் சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம், நாளை அமேசான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மையக்கரு, பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும்  நெருக்கடிகள் பற்றியதாகும்.

இதனிடையே, ஜெய்பீம் படத்தின் பிரத்யேக காட்சிகள், படக்குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நேற்று திரையிட்டுக் காட்டினர். அதுமட்டுமின்றி, இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக, 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், நடிகர் சூர்யா தரப்பில் ரூ. 1 கோடி நிதி உதவியை முதல்வரிடம் வழங்கினார். சூர்யாவின் இச்சேவையை, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், ஜெய்பீம் படத்தை பார்த்தேன். அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கனமாக ஆக்கிவிட்டன. விளிம்புநிலை இருளர் மக்களின் வாழ்வியலையும் அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமாக, கலைப்பூர்வமாக காட்சிப்படுத்த இயலாது என்பதைக் காட்டியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். தமிழக முதல்வரின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News