விஜய் சேதுபதி, அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தும் யதார்த்த கலைஞன்..!
தனக்கான வேலை கணக்கு எழுதுவது அல்ல; நடிப்பதே எனக்கு பொருத்தமானது என்றும் உறுதி பூண்டார்.
தமிழ் திரையுலகில் அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு யதார்த்த கலைஞன்,விஜய் சேதுபதி.
அவருக்கும் சினிமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் துபாயில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்குதான் அவருக்கான வாழ்க்கைத் துணையையும் சந்தித்தார். தனக்கான வேலை கணக்கு எழுத்துவதல்ல என்று முடிவு செய்து நாடு திரும்பினார். நடிப்பதே எனக்கு பொருத்தமானது என்றும் உறுதி பூண்டார். இடைப்பட்ட காலங்களில் கூத்துப்பட்டறையில் கணக்காளராக சேர்ந்து நடிப்பின் நுணுக்கங்களை நேரடியாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் கலைஞர் டிவியில் நடந்த நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெளிவந்த கார்த்திக் சுப்பாராஜ்-ன் குறும்படங்களில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. அதில் தனது திறமையை வெளிப்புடுத்தினார். மெல்ல மெல்ல தனக்கான இடத்தை பிடித்து ஒரு ஹீரோவுக்கான லிஸ்ட்டில் ஏறுவதற்குள் சில படங்களில் சிறுசிறு பாத்திரங்களில் வில்லனாக நடித்து முடித்தார்.
தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து 16 படங்கள் நடித்து அவையெல்லாம் வெற்றியடைந்ததுடன் லாபம் ஈட்டி கொடுத்த படங்கள் என்பது விஜய் சேதுபதி என்கிற ஒரே நடிகருக்கு மட்டுமே கிடைத்த ஒரு சிறப்பு. அவரது 17வது படம் - றெக்க மட்டும் சிறிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. அவர் உச்சம் தொட்டது சினிமாவில் ஒரு வரலாற்று சாதனை. சினிமா பின்புலம் இல்லாமல் ஒரு உயர்ந்த இடத்தை பிடித்ததில் அஜித்துக்கு பின் விஜய் சேதுபதிக்கே கிடைத்த கூடுதல் சிறப்பு.
அவர் அந்த இடத்தை பிடித்ததற்கு 3 காரணங்களை சொல்லலாம்.
முதலில் தான் ஹீரோ ஆகிவிட்டோம். மீண்டும் வில்லன் ரோல் பண்ணமாட்டேன் என்று அடம் பிடிக்கவில்லை. நல்ல ரோலாக இருந்தால் அதை சிறப்பாக செய்தார். உதாரணம் மாஸ்டர் படம். இரண்டாவது கதையின் தேர்வு. சிறந்தவைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்தார். அதில் ஆண்டவன் கட்டளை, தர்மதுரை, பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைக்கதைகளை சொல்லலாம். அவை அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள். ஆனால், பெரும் லாபம் ஈட்டின.
மூன்றாவது கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனினும் சொல்லியே ஆகவேண்டும். 'கொஞ்சம் லக்.' இதுவும் இருந்ததால்தான் அவரால் உச்சம் தொட முடிந்தது. யதார்த்த நடிப்பு, எளிமையான தோற்றம், தனக்கென ஒரு தனி பாணி இவையே திரையுலகில் ஒரு தவிர்க்கமுடியாத ஹீரோ அந்தஸ்த்தில் அவரை தூக்கி நிறுத்தியது.
'உனக்கு கேமரா முகம் உள்ளது, நடிக்கலாம்' என்று பிரபல இயக்குனர் பாலு மஹேந்திரா கூறியதை பின்னொரு நாள் விஜய் சேதுபதி நினைவுப்படுத்தி கூறியிருந்தார்.மனைவி ஜெஸ்ஸி சேதுபதி, 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்கிறார்.