அரசியலில் அவமானப்பட்டு சினிமா வாழ்வைத்தொலைத்த 'ஞானக்கலைஞன்' வடிவேல்..!

அரசியல், தனது சினிமா வாழ்க்கையை இப்படி பாதிக்கும் என்று அவரே கற்பனை செய்து கூட பார்த்திருக்கமாட்டார்.

Update: 2022-01-16 08:30 GMT

நகைச்சுவை நடிகர் வடிவேலு 

 சமூக ஊடகங்களில் இவரை விட்டு விட்டு எந்த மீம்ஸையும் நீங்கள் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. தென்னிந்தியாவில் இருப்பவர்கள் குறிப்பாக ஒரு தமிழராக இருப்பவருக்கு இது தெரியாமலும் இருக்க முடியாது.

இரண்டாயிரம் ஆண்டுகளில் அவரைப்போல உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகரை நாம் பார்த்திருக்க முடியாது. சுந்தர்.சி இயக்கிய படங்களில் வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் அவர். அவர் வேறு யாருமல்ல, நடிகர் வடிவேல்.


2003ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய 'வின்னர்' திரைப்படத்தில் அவருக்கு ஒரு சிறந்த அடையாளம் கிடைத்தது. அதன்பிறகு, தமிழ்த் துறையின் தவிர்க்கமுடியாத சிறந்த நகைச்சுவை நடிகரானார். அவரது நகைச்சுவைப் பாடல்களுக்கு மட்டுமே வெற்றி பெற்ற திரைப்படங்கள் உள்ளன. வின்னர், கிரி, மருதமலை, தலைநகரம், எம் மகன் என படங்களின் பட்டியல் நீண்டு செல்கிறது.

பிரம்மானந்தம் போன்ற நகைச்சுவை நடிகர் தங்களுக்கு இருப்பதை பெருமையாக பேசும் தெலுங்கு திரையுலகம் போல, ​​தமிழ் திரை உலகுக்கு ஒரு மாபெரும் கலைஞனாக வடிவேலு உருவானார். அவரது தனிப்பட்ட நகைச்சுவை திறமைகளுக்காக மட்டுமின்றி, பல துணை வேடங்களிலும் வடிவேலு ரசிகர்களைக் கவர்ந்தார். தேவர் மகன், பசும்பொன், எம் மகன் மற்றும் கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் அவரது நடிப்பு எதிர்கால நகைச்சுவை நடிகர்களுக்கு முன்மாதிரியானவையாக உள்ளன.


வடிவேலுவின் கால்சீட்டுக்காக தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் காத்திருந்த சம்பவங்கள் உண்டு. 'சந்திரமுகி' படப்பிடிப்பில் வடிவேலு கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  காத்திருக்க வேண்டியிருந்தது. வடிவேலுவின் முக்கியத்துவத்துக்கு இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை. நகைச்சுவை நடிப்பு மூலம் அவர் பெற்ற அசுர வளர்ச்சியின் போது,அவர் எதிர்காலம் மற்றும் அவரது வாழ்க்கையில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்.

தேமுதிக தலைவராக மாறிய விஜயகாந்துடன் வடிவேலு ஒரு படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பிரச்னை பல திருப்புமுனைகளை ஏற்படுத்திவிட்டது. அந்த திரைப்படத்தில் வடிவேலு, விஜகாந்தை "தமிழக முதல்வர்" என்று அழைத்து பேச வேண்டும் என்று விஜயகாந்த் விரும்புவதாக வடிவேலுவுக்கு தெரிய வந்தது. ஆனால், வடிவேலு அதற்கு மறுத்துவிட்டார். அதனால், தேமுதிகவினர் வடிவேலுவின் வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தினர். இந்த சம்பவங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியது.


உண்மையில், வடிவேலுவின் தொடக்க கால சினிமா வாழ்க்கையில் அவருக்கு உதவியவர் விஜயகாந்த்தான். அதனால், அப்படிப்பட்ட ஒரு டயலாக்கை சொல்லச் சொல்லி ஒரு நன்றியை எதிர்பார்த்தார். அந்த கசப்பான நிகழ்வுகளே அரசியல் வரை நீண்டது. 2011-ம் ஆண்டில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது ​​அவர்கள் இருவரும் மோசமான எதிரிகளாக மாறினர்.

2011ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, ​ திமுகவுக்கு ஆதரவாக வடிவேல் பிரச்சாரம் செய்தார். அப்போது வடிவேலு, விஜயகாந்தை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தார். அப்போது அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க., கூட்டணியில் இருந்தது. அன்றைய அ.தி.மு.க  பொதுச்செயலர்   ஜெயலலிதா, வடிவேலுவின் பேச்சை கவனத்தில் கொண்டார்.

அந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அமோகமாக வெற்றி பெற்றது. ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானார். இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம், திமுக கூட்டணி ஒரு சில தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறமுடியவில்லை. அதுவே வடிவேலுவுக்கு பெரும் தலைவலியாக மாறியது. அன்றில் இருந்தே ஒரு மாபெரும் கலைஞனின் வீழ்ச்சி தொடங்கியது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும் கூட அவரால் முன்னணி நடிகர்களுடன் எந்தப் படத்திலும் நடிக்க முடியவில்லை.


சமீப காலங்களில் வெளியான தெனாலிராமன், எலி, கத்தி சண்டை மற்றும் பல படங்கள் படுதோல்வி அடைந்தன. இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிடிப்பின் போது இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்னைகளால் அவருக்கு 'ரெட் கார்ட்'  வழங்கப்பட்டது. தற்போது சினிமா வாய்ப்பு இல்லாமல் மற்ற தொழில்களை கவனித்து வருகிறார்.

தமிழகத்தில் சம கால நகைச்சுவை நடிகர்களை வைத்துப்பார்க்கும்போது அவர் ஒரு 'ஞானக்கலைஞன்'. அவரது நடிப்பை ரசிக்காதவர் எவருமில்லை. எதிரிகள் என்றாலும் கூட அவரது நடிப்பை பாராட்டியே ஆகவேண்டும். நகைச்சுவை சக்கரவர்த்தி போல வலம் வந்த அவர், அரசியலால் அவமானப்பட்டு படுதோல்வி அடைந்தார்.


அந்த 'ஞானக்கலைஞன்' மீண்டும் வரவேண்டும். நகைச்சுவை மழையில்  தமிழகம் மீண்டும் நனையவேண்டும். வாருங்கள் மகா கலைஞனே..!

Tags:    

Similar News