"நான் ஒரு முட்டாளுங்க" பாடல் உருவான கதை..!

‘சகோதரி’ (1959) படம் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படமாகி முடிந்த நேரம்.;

Update: 2024-08-09 05:36 GMT

சந்திரபாபு 

எடுக்கப்பட்ட  படத்தை ஏ.வி.எம். செட்டியார் போட்டுப் பார்த்தார். அவருக்குத் திருப்தியில்லை. படம் எடுபடாது. ஓட வைக்க என்ன பண்ணலாம் என யோசித்த செட்டியாருக்கு, அப்போது உச்சத்தில் இருந்த சந்திரபாபுவின் காமெடி டிராக்கை இணைக்கலாம் எனத் தோன்றியது. ‘சந்திரபாபுவை அழைத்து வாருங்கள்‘ என்றார்.

செட்டியார் அழைக்கிறார் என்றதும் சந்திரபாபுவும் உடனே புறப்பட்டார். ‘வா பாபு உட்கார்.‘ என்றார் செட்டியார். ‘நம்ம ஸ்டூடியோவில் ’சகோதரி’ன்னு ஒரு படம் தயாரிச்சிருக்கிறோம். போய் அந்தப் படத்தை பார்த்து விட்டு வா’ என்றார். அன்று மதியமே படத்தைப் பார்த்தார் சந்திரபாபு.

‘ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத காட்சிகள். இதில் நாம் என்ன செய்ய முடியும்?’ என யோசித்தவாறே மாலையில் செட்டியாரைச் சந்தித்தார் சந்திரபாபு. ‘என்ன பாபு, படம் எப்படி இருக்கிறது?’ என்றார் செட்டியார். ‘எனக்கு ஒன்றும் புரியவில்லை. காட்சி அமைப்பு தெளிவாக இல்லை’ என்றார் சந்திரபாபு.

‘உன் பொறுப்பில் விடுகிறேன். நல்ல காமெடியை பத்து நாட்களில் படமாக்கி படத்துடன் சேர்த்து ஒரு கோர்வையாக்கிக் கொடு’ என்றார் செட்டியார்.

‘யோசித்துச் சொல்கிறேன்’ என்று சொல்லி விடைபெற்ற சந்திரபாபு, ஒரு நாள் முழுவதும் யோசித்துப் பார்த்தார். சரோஜாதேவியுடன் பழகியபோது, சந்திரபாபுவின் நண்பர்கள் சொன்ன சம்பவம் அவருக்கு ஞாபகம் வந்தது. அதேபோல் சில வருடங்களுக்கு முன் எம்.ஜி.ஆரிடமும், என்.எஸ். கிருஷ்ணனிடமும் பால்காரனாக நடித்துக் காட்டிய சம்பவமும் அவர் நினைவுக்கு வந்தது. அந்த சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு ஒரு கற்பனையை வளர்த்துக் கொண்டார்.

‘பால்கார பரமசிவம்’ கதாபாத்திரம் உருவானது. செட்டியாரிடம் சென்ற சந்திரபாபு, ‘ஏழு நாள்களில் சிறப்பான நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கித் தருகிறேன். எனக்கு லட்ச ரூபாய் தாருங்கள்’ என்றார். ‘ரொம்ப அதிகம் பாபு. அவ்வளவு எல்லாம் முடியாது’ என்றார் செட்டியார்.

‘நீங்கள் எவ்வளவு நினைக்கிறீர்கள்?’

‘ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் வைத்துக் கொள்.’

‘ஸாரி மிஸ்டர். செட்டியார். என்னால் முடியாது‘ என்று கூறி விட்டு வெளியே வந்து விட்டார் சந்திரபாபு. செட்டியார் விடவில்லை. பேரம் நடந்து கொண்டே தான் இருந்தது.

‘நானே காட்சிகளை அமைத்து நானே பாடி, வசனங்களை எழுதி நடிக்க வேண்டும். பலபேர் இன்று நடித்துத் தருகிறேன் என்று கூறிவிட்டு பல லட்ச ரூபாய்களை வாங்கி ஏப்பம் விட்டு விட்டு ஏமாற்றுகிறார்களே, அப்படி நான் செய்பவனில்லையே! ஒரு நாளைக்குப் பத்தாயிரம் தருவதாகச் சொல்கிறீர்கள். நான் நினைத்தால் பத்து நாட்கள் கூட வேலையை இழுத்து ஒரு லட்சத்தைப் பெற முடியும். ஆனால் எனக்கு மனசாட்சி ஒன்று இருக்கிறதே’ என சந்திரபாபு செட்டியாரிடம் விவாதம் செய்தார்.

‘சரி பாபு. நீ வேலையை ஆரம்பி. நான் பார்த்துச் செய்கிறேன்‘ என்றார் செட்டியார். செட்டியார் சொல் தவற மாட்டார் என்பதால் சந்திரபாபு வேலையை ஆரம்பித்தார். மூன்று நாள்கள் படப்பிடிப்பு முடிந்ததும், கண்ணதாசனை அழைத்து, தான் படமாக்கப் போகும் பாடலுக்கான காட்சி அமைப்பை விவரித்தார் சந்திரபாபு.

‘நான் ஒரு முட்டாளுங்க’ என பல்லவியும் கொடுக்க, அடுத்த சில நிமிடங்களில் முழுப் பாடலையும் எழுதிக் கொடுத்தார் கண்ணதாசன். அந்தப் பாடல் படமாக்கப்பட்டது.

நகைச்சுவைக் காட்சிகள் கதைக்கேற்ற பாணியில் படமாக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு, எங்கெங்கு தேவையோ அங்கங்கு இணைக்கப்பட்டது.

செட்டியாருக்கு முழுத் திருப்தி. சந்திரபாபு கேட்ட ஒரு லட்சத்தை மகிழ்வுடன் அளித்தார். அப்போது ஒரு முழுப்படத்திற்கே முன்னணி நடிகர்கள் ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம் என வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சந்திரபாபு, ஒரு லட்ச ரூபாய் வாங்கியது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ’சகோதரி’ படம் வெற்றி பெற்றது.

சுதர்சனம் மாஸ்டர் இசையமைப்பில், ‘நான் ஒரு முட்டாளுங்க’ பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ‘தன்னைப் பற்றி தானே சுயவிமர்சனம் செய்து கொண்ட பாடல் அது’ என்றார் கண்ணதாசன்.

(சந்திரபாபு குறித்து தமிழில் முதன் முதலில் எழுதப்பட்ட முகிலின் - சந்திரபாபு : கண்ணீரும் புன்னகையும் நூலில் இருந்து.)

Tags:    

Similar News