தமிழக சட்டபேரவை சபாநாயகராக அப்பாவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும் தேர்வு
தமிழகத்தில் 16 வது சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து, முதல் பேரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் சட்டபேரவை சபாநாயகராக அப்பாவும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக சட்ட பேரவை கூட்டம் இன்று காலை கலைவாணர் அரங்கில் கூடியது. தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சட்டசபையை நடத்தினார்.
முதலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதன்பிறகு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உறுதிமொழி ஏற்றனர்.
அகர வரிசைப்படி புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து தமிழக சட்டபேரவை சபாநாயகர் பதவிக்கு அப்பாவு, துணை சபாநாயகர் பதவிக்கு பிச்சாண்டி ஆகிய இருவரும்போட்டியிட்டனர்.
இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட அய்யாவு ராதாபுரம் தொகுதியில் இருந்து சட்டபேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்.
பிச்சாண்டி தி.மு.க. ஆட்சியில் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர். சட்டசபைக்கு 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிட தக்கது.