தேர்தல் பிரசாரத்தில் முகக்கவசம் கட்டாயம் : சுகாதாரத்துறை செயலாளர்

தேர்தல் பிரசாரத்தின் போது முகக் கவசங்கள் அணியாதவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.;

Update: 2021-03-23 16:45 GMT

சென்னை, பிராட்வே பகுதியில், கரோனா பரிசோதனை மையங்களை, சுகாதாரத்துறை செயலாளர் இன்று (23ம் தேதி) ஆய்வு செய்தார். அப்போது நோய்த் தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என பொது மக்களுக்கு விழிப்புணர்வை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளது. தினந்தோறும், 70 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

1.5 சதவீதமாக இருந்த பாதிப்பு விகிதம், தற்போது 2 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, 100 பேருக்கு பரிசோதனை செய்தால், இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். அதைத் தவிர போர்க்கால அடிப்படையில் சுகாதாரத் துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

சென்னையில், பெருங்குடி, தரமணி, கந்தன்சாவடி பகுதிகளில் உள்ள, ஒரே நிறுவனத்தை சேர்ந்த 40 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.

இதைத் தவிர, தேர்தல் பிரசாரங்களில் முகக் கவசம் அணியாதவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

சென்னையில், ஒரே பகுதிகளில் அதிகமாக தொற்று ஏற்படும் இடங்களை கண்டறிந்து வருகிறோம். அதன்படி, பெரம்பூர், வானகரம், பெருங்குடி, மடிப்பாக்கம், தண்டையார்பேட்டை, கொடுங்கையூரில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நோய்த் தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும், 38,372 பேரிடமிருந்து, ரூ. 83.05 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags:    

Similar News