கபடி விளையாட்டு வீரர்களை ரயில்வே நிர்வாகம் இப்படியா அவமதிப்பது?
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கு அபராதம் விதித்து ரயில்வே நிர்வாகம் அவமரியாதை செய்து உள்ளது.
இந்த சம்பவம் நடந்தது திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரர்கள் 10 பேர் சேலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்று விட்டு விளையாட்டில் வெற்றி பெற்றதற்கான கோப்பையுடன் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக சேலத்தில் இருந்து பஸ்ஸில் திருச்சிக்கு வந்தனர்.
பின்னர் திருச்சியில் இருந்து இன்று காலை குருவாயூர் செல்லும் சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இன்று காலை 8 மணி அளவில் வந்தனர். கிராமத்து இளைஞர்களான அந்த விளையாட்டு வீரர்களுக்கு அறியாமை காரணமாக ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை.
இந்த அறியாமையால் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த அவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விட்டனர் .எப்படி நீங்கள் டிக்கெட் எடுக்காமல், முன்பதிவு செய்யாமல் ரயில் நிலையத்திற்குள் வரலாமென்று கிடுக்கிப்பிடி போட்டனர். கபடி விளையாட்டு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அவர்களுக்குஅதிகாரிகளின் இந்த கேள்வி பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.
அவர்கள் நாங்கள் அனைவரும் கபடி விளையாட்டு வீரர்கள் எங்களுக்கு முன்பதிவு பற்றி தெரியவில்லை விளையாட்டு வீரர்கள் என்பதால் எங்களை மன்னித்து முன்பதிவு செய்வதற்கு உதவி செய்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க அனுமதியுங்கள் என்று மன்றாடிக் கேட்டனர் .ஆனால் ரயில்வே போலீசாரும் அதிகாரிகளும் அவர்களை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் முன்பதிவு செய்யாமல் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து தவறு உங்களுக்கு 1, 500 ரூபாய் அபராதம் விதிக்கிறோம், அபராதத்தை கட்டினால் தான் இங்கிருந்து செல்ல முடியும் என கறாராக மிரட்டும் பாணியில் கூறி விட்டனர் .
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் விளையாட்டு வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர் .அவர்களுக்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வந்து விளையாட்டு வீரர்களை மன்னித்து அவர்களை ரயிலில் பயணிப்பதற்கு அனுமதியுங்கள் என எவ்வளவோ கெஞ்சி கேட்டு பலனில்லாமல் போனது.
தங்களிடம் அபராதம் செலுத்த பணம் இல்லை விளையாட்டில் நாங்கள் பெற்ற பரிசு கோப்பை தான் கையில் உள்ளது. இதை வைத்து நாங்கள் எப்படி அபராத தொகையை செலுத்த முடியும்? என அந்த வீரர்களும் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பலனில்லை. இதனால் வேறுவழியின்றி அந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி பஸ்சில் பயணிப்பதற்காக திருச்சி மத்திய பஸ் நிலையத்தை நோக்கி நடந்தனர்.
நமது மத்திய அரசும் ,மாநில அரசும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக எவ்வளவோ திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். ஆனால் கிராமப்புற இளைஞர்களான இந்த கபடி விளையாட்டு வீரர்கள் அறியாமையால் செய்த தவறை மன்னித்து அவர்களை ரயிலில் பயணிப்பதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதித்திருந்தால் இல்லை அபராதம் விதிக்காமல் இருந்தாலாவது அவர்களை ஊக்கப்படுத்துவது போல் இருந்திருக்கும்.
ஆனால் அந்த விளையாட்டு வீரர்கள் எவ்வளவோ கெஞ்சியும் கொஞ்சம்கூட அதனை பொருட்படுத்தாமல் அவர்களை ரயில்வே நிர்வாகம் விதிமுறைகளை கூறி அவமரியாதை செய்தது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்நிலை நீடித்தால் இந்திய விளையாட்டு வீரர்கள் எப்படி சர்வதேச அரங்கில் புகழ் பெற முடியும் ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்க முடியும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆகவே விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை ஊக்கப்படுத்தி இதற்கான நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகளை மத்திய ,மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.