கொலை வழக்கில் தேடப்பட்ட கடலூர் திமுக எம்பி நீதிமன்றத்தில் சரண்

கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Update: 2021-10-11 05:42 GMT

எம்.பி. ரமேஷ்

கடலூர் எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை, பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இங்கு வேலைபார்த்து வந்த பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு (வயது 55) , கடந்த மாதம் 19-ந்தேதி மர்மமான முறையில் இறந்தார்.

காடாம்புலியூர் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு, இதுபற்றி விசாரித்தனர். தனது தந்தையை ரமேஷ் எம்.பி. மற்றும் முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் அடித்துக் கொன்றதாகவும், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், அரசுக்கு கோரிக்கை விடுத்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க, தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார், விசாரணையை தொடங்கினர். இதனிடையே, உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில், கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி சிபிசிஐடி போலீசார், கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ் (31), தொழிலாளர்கள் அல்லா பிச்சை (53), சுந்தர் என்கிற சுந்தர்ராஜ் (31), வினோத் (31), கந்தவேல் (49) ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். அல்லா பிச்சை உள்ளிட்ட 4 பேர், விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ரமேஷ் எங்குள்ளார் என்று தெரியாத நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர் குறித்து விசாரித்து வந்தனர். இச்சூழலில், கடலூர் எம்.பி. ரமேஷ், இன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். முன்னதாக கூறிய அவர், முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் தாம் நிரபராதி என்பதை சட்டத்தின் முன் நிரூபித்து, வெளியே வருவேன் என்றார். 

Tags:    

Similar News