“தேர்தல் தோல்விக்கு எல்லாரும்தான் காரணம்...”
கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்ததற்கு எல்லோரும் தான் காரணம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
கட்சிக்குள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம், உப்புச் சப்பில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. கூட்டத்தில் எடப்பாடி நடந்து கொண்ட விதமும், சீனியர்கள் சிலரின் சர்ச்சைப் பேச்சும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்தான அ.தி.மு.க-வின் ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9-ம் தேதி ‘எம்.ஜி.ஆர் மாளிகை’யில், நடக்கவிருந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திடீரென ரத்துசெய்யப்பட்டது. பிறகு, ஆகஸ்ட் 16-ம் தேதி, அவசர செயற்குழுக் கூட்டமாக நடைபெற்றது.
‘மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டு, அவசர செயற்குழு நடக்கிறதென்றால், முக்கியமான அறிவிப்பு இருக்கும்’ என்று செயற்குழு உறுப்பினர்கள் ஆர்வத்தோடு சென்னைக்குப் படையெடுத்தனர். மறுபக்கம், ‘அ.தி.மு.க-வின் தோல்விக்குக் காரணம் எடப்பாடிதான். எனவே, அவருக்கு எதிராகச் செயற்குழு கொந்தளிக்கப்போகிறது’ என்று ஓ.பி.எஸ்., சசிகலா அனுதாபிகளும் எதிர்பார்த்தனர். ஆனால் “மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு பொதுக்கூட்டம், சுற்றுப்பயணம், நூற்றாண்டு விழா எனக் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தான முடிவுகளோடு சம்பிரதாயக் கூட்டமாக நடந்து முடிந்திருக்கிறது.
அதேசமயம், சீனியர்கள் சிலர் சொல்லிவைத்தாற்போல ‘இணைப்பு விவகாரம்’ குறித்துப் பேசியது சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது” என்கிறார்கள்.
கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கூறியதாவது: “முதலில் பேசிய துணைப்பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், ‘இவர் தான் (எடப்பாடியை நோக்கி) நம் பொதுச்செயலாளர்... இவர் தான் நம் முதல்வர்...’ என்று பேசத் தொடங்க கூட்டத்திலிருந்த இறுக்கம் தளர்ந்து நார்மலானது.
அவருக்குப் பிறகு பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ‘2026 தேர்தல் தொடர்பாக முதற்கட்ட ஆலோசனை செய்யத்தான் இங்கு நாம் கூடியிருக்கிறோம். 2026-ஐ விட்டால் நமக்குக் கஞ்சி கிடைக்காது என்பதை மனதில்வைத்து வேலை பாருங்க. பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறிச்ச பிறகும், நமக்குச் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கல. (தமிழ்மகன் உசேனை நோக்கி) ‘உங்க ஆளுங்க நமக்கு ஓட்டே போடல’ என்றார்.
பின்னர் வழக்கறிஞர் அணிச் செயலாளர் இன்பதுரையைப் பார்த்தவாறே ‘உங்க ஆளுங்களும் ஓட்டுப்போடல’ என்று அவர் சொல்ல… கூட்டம் லேசாகச் சலசலப்பானது. தொடர்ந்து பேசியவர், ‘இப்படிப் பேசுகிறேன் என்று அவர்கள் வருத்தப்படக்கூடாது. ஆனால், அதுதான் உண்மை. இதை நாம் சரிசெய்ய வேண்டும். மற்றபடி அவங்க வரணும் இவங்க வரணும்னு யோசிக்காமல் அடிப்படையைச் சரிசெய்ய வேண்டும்’ என்றார்.
அடுத்து பேசிய முனுசாமி, ‘இணைப்புக்கு இங்கு அவசியம் ஏற்படவில்லை. ஒருசிலர் லாபமடைய, கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்துகிறார்கள். துரோகம் செய்தவர்களை மீண்டும் கொண்டு வர என்ன அவசியம் இருக்கிறது... அது குறித்துப் பேசாமல், கட்சி வேலையை ஒழுங்காகப் பார்த்தாலே வெற்றி நமக்குத்தான்’ என்றார் காட்டமாக.
வேலுமணியோ, ‘நம்முடைய பொதுச் செயலாளர் எடப்பாடியார் தான் அ.தி.மு.க. நமது வேலையைச் சிறப்பாக, உயிரைக் கொடுத்து செய்தால், 2026-ல் அவர்தான் முதல்வர். தேர்தல் வேலையை இன்று முதல் தொடங்கினால் தான், வெற்றியை அடைய முடியும். எடப்பாடியாரின் கைகளை வலுப்படுத்தி, ஆட்சியில் அ.தி.மு.க-வை மீண்டும் அமரவைக்க இந்தச் செயற்குழுவில் சூளுரைப்போம்’ என்றார் உணர்ச்சிகரமாக.
இறுதியாகப் பேசிய எடப்பாடி, ‘நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு எல்லாரும் தான் காரணம். எம்.ஜி.ஆர்., அம்மா காலத்திலும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்திருக்கிறது. கட்சிக்குத் துரோகம் செய்த சிலரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது யாரின் தனிப்பட்ட முடிவும் இல்லை. அது கட்சி எடுத்த முடிவு. ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டாம்’ என்பதும் தொண்டர்கள் எடுத்த முடிவு தான்.
எனவே, அது குறித்துப் பேசி எந்தப் பயனும் இல்லை. சுயமரியாதையை இழந்து, யாரிடமும் கையேந்தி நிற்கவேண்டிய அவசியம் அ.தி.மு.க-வுக்கு இல்லை. அப்படி நாம் நிற்கப் போவதும் இல்லை. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்துத் தலைமைக் கழக நிர்வாகிகள் நல்ல முடிவெடுப்போம். நீங்கள் கட்சி வேலையைச் செய்வதில் முதலில் ஆர்வம் காட்டுங்கள்’ என்று ‘தெளிவாக’ சொல்லிவிட்டு பேச்சை முடித்துக்கொண்டார்” என்றனர்.
செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள் சிலர் கூறியதாவது: “தேர்தலுக்குப் பிறகு நடக்கும் செயற்குழுவில், எப்போதும் நிர்வாகிகள் வெளிப்படையாகப் பேசுவார்கள். எனவே, அம்மா இருக்கும் போதே செயற்குழுவில் அனல் பறக்கும். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. எனவே, முக்கியமான விஷயங்கள் விவாதத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘கழகத்தின் வெற்றிக்காக அயராது உழைத்த பொதுச்செயலாளருக்கு நன்றியும் பாராட்டும்!’ என்று முதல் தீர்மானமாக நிறைவேற்றி அதிர்ச்சி கொடுத்து விட்டது செயற்குழு.
‘1996 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கூடிய செயற்குழுவில், ‘தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்’ என்றார் அம்மா. 2006 தோல்விக்குப் பிறகும் அதையேதான் சொன்னார். ஆனால், எடப்பாடியோ ‘இந்தத் தோல்விக்கு எல்லாரும் காரணம்’ என்கிறார்.
கூட்டணி முதல் வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் என எல்லாவற்றையும் எடப்பாடியும், அவரைச் சுற்றி இருப்பவர்களும் தான் செய்தனர். இப்போது எல்லோரும் காரணமென்றால், அதை எப்படி ஏற்றுக்கொள்வது... கட்சியின் வளர்ச்சி குறித்து ஆரோக்கியமான விவாதம் செய்யத்தான் செயற்குழு உறுப்பினர்கள் நினைத்தனர். ஆனால் ‘இணைப்பு’ குறித்து ஏற்கெனவே பேசியவர்களை மறைமுகமாக எச்சரிக்கும் தொனியிலேயே முக்கிய சீனியர்கள் பேசினார்கள். அவர்கள் பேசியது எடப்பாடியின் வாய்ஸ்தான். இப்படியான தேவையற்ற பேச்சுகளால், கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் தான் வளரத் தொடங்கியிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் தோல்வியை நாடாளுமன்றத் தேர்தலில் சந்தித்திருக்கிறோம். அது ஏன் என்று வெளிப்படையாக, செயற்குழுவில் விவாதிக்கவில்லை.
பிறகு எப்படி பிரச்னைகளைச் சரிசெய்ய முடியும்... கட்சியின் உயிர்நாடியான செயற்குழுவை இப்படி உப்புச் சப்பில்லாமல் நடத்தி முடிப்பார்கள் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கட்சியின் வளர்ச்சிக்கு இது நல்லதல்ல” என்றனர் விரக்தியுடன்.
‘ஆலோசனையாவது வெங்காயமாவது... நான் சொல்றதை மட்டும் கேளுங்க... போய் வேலையைப் பாருங்க” எனத் தன் கட்சி நிர்வாகிகளுக்கு மீண்டும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் எடப்பாடியார்!