'ரிப்பன் வெட்டுவது மட்டுமே திமுக' - கோவையில் எடப்பாடி பழனிசாமி கிண்டல்
Coimbatore News, Coimbatore News Today- வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தது, செயல்படுத்தியது அதிமுக, ஆனால், ரிப்பன் வெட்டி திறப்பு விழா செய்வது திமுக என, கோவையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Coimbatore News, Coimbatore News Today- - கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து, இன்று கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க அரசு கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், கோவையில் எந்தஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், குண்டும் குழியுமாக உள்ள, சிதிலமடைந்த ரோடுகளை புதுப்பிக்க வலியுறுத்தியும், தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது;
அதிமுகவை விமர்சனம் செய்ய, திமுகவுக்கு தகுதி இல்லை. அதிமுக வின் 10 ஆண்டு கால ஆட்சி, தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்தது. கோவை மாவட்டத்தில் மேற்கொண்ட குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி, குளங்களில் நீராதாரம் பெருகியது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. மாவட்டத்தில், 28 தடுப்பணைகள் கட்டப்பட்டு ஓடைகள், நதிகளில் நீராதாரம், மழைநீர் சேகரிக்கப்பட்டது.
அதிமுக அரசு கொண்டு வந்த மக்களுக்கான நல்ல திட்டங்களை எல்லாம் திமுக அரசு கைவிட்டு விட்டது. மின்கட்டண உயர்வு, சொத்துவரி, பால் விலை உயர்வு இவற்றை கண்டித்து வரும் 9ம் தேதி பேரூராட்சியிலும், 12ம் தேதி ஊராட்சியிலும், 13ம் தேதி நகராட்சி மற்றும் மாநகராட்சியிலும் விலை உயர்வை கண்டித்தும் மற்றும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை கொண்டு வந்தோம். திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையாக, அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது. கோவையில் விமான நிலைய விரிவாக்கம் திட்டத்தை நிறைவேற்றியது. முக்கிய நகரங்களில், பிரமாண்டமான பாலங்களை கட்டியது. இதுபோல் தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக. அந்த திட்டங்களுக்கு பல நுாறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செயல்படுத்தியது அதிமுக, அதற்காக செயல்பட்டவர்கள் அதிமுகவினர். ஆனால், இப்போது அதை ரிப்பன் வெட்டி திறப்பு விழா செய்து வைப்பது திமுக வினராக உள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ க்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் கறுப்பு சட்டை அணிந்து காணப்பட்டனர்.