'நீங்களே கடவுள்' :கொரோனா பணி செவிலியர்கள் கால்களில் விழுந்து உருக்கம்
செவிலியர் கால்களில் விழுந்து வணங்கும் . இ.எஸ். ஐ.முதல்வர்.
நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 தேதி, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு செவிலியர் தினம் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன் களப்பணியாளர்களான செவிலியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான மருத்துவமனையான இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது.
அப்போது நவீன தாதியலின் நிறுவனரான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்துக்கு மருத்துவமனை முதல்வர் ரவீந்தரன் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செவிலியர்களிடையே பேசிய மருத்துவமனை முதல்வர் ரவீந்தரன் மருத்துவர்கள் இடும் கட்டளைகள் மற்றும் அறிவுரைகளை ஏற்று பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவிலியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட மருத்துவமனை முதல்வர் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து, நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள் என கூறி அழுது கண்ணீர் விட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu