நீங்களும் வழக்கறிஞர் ஆகலாம்..!
பைல் படம்
பன்னிரண்டாம் வகுப்பிற்கு பின் ஒவ்வொரு மாணவரும் தனது வாழ்க்கையின் இலட்சியத்தை நோக்கி பயணிப்பதற்காக தமக்கு பிடித்தமான, அதிக பொருள் ஈட்டக்கூடிய துறைகளை தேர்ந்தெடுக்கின்றனர். படிப்பதற்கு எண்ணிலடங்கா துறைகள் இருந்தாலும் ஒரு சில படிப்புகள் மட்டுமே, சமூக நலன் சார்ந்து பெருவாரியான மக்களுக்கு பயனளிக்கக்கூடிய படிப்புகளாக அமைந்திருக்கின்றன.
சமூகம் சார்ந்து சமூக நலன் சார்ந்த படிப்புகளில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த படிப்பு சட்டப்படிப்பு. மக்களாக இருந்தாலும் சரி, மக்களாட்சியாக இருந்தாலும் சரி, சிறப்பாக செயல்பட சட்டங்கள் வகுப்பப்பட வேண்டும். அவ்வாறு வகுக்கப்பட்ட சட்டங்கள் தான் நீதியின் பிம்பம்களாக பிரதிபலிக்கின்றன.
உரிமை, கடமை என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றது. அதில் ஒன்று பயனற்று போனால் செல்லா காசாகிவிடும். தனி மனிதனின் உரிமைகள் கடமைகள் மட்டுமல்லாது தனிமனிதனை சுற்றியிருக்க கூடிய அரசு இயந்திரம், சுற்றுப்புறம் மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே அமைகின்றது.
அப்படிப்பட்ட சக்திவாய்ந்த துறைகளில் ஒன்றான சட்டம் படிப்பு குறித்து இக்கட்டுரையில் காண்போம்!
சட்டக்கல்வி என்பது தொழிற்கல்வி. 12ம் வகுப்பு முடித்தவுடன் பி.ஏ.,எல்.எல்.பி., என்று ஒருங்கிணைந்த 5 ஆண்டுகள் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். டிகிரி முடித்தவுடன் எல்.எல்.பி., (LLB) என்ற 3 ஆண்டுகள் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பில் பி.ஏ.,எல்.எல்.பி., பி.காம்.,எல்.எல்.பி., பி.பி.ஏ.,எல்.எல்.பி., மற்றும் பி.சி.ஏ.,எல்.எல்.பி., (BA. LLB., B.Com. LLB., BBA LLB., BCA LLB) ஆகிய சட்டப்படிப்புகளும் உள்ளன.
இந்திய அளவில் 22 தேசிய சட்டப்பல்கலைகழகங்களும் மற்றும் சில தனியார் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. 22 தேசிய சட்டப்பல்கலைகழகங்களில் ஒன்று திருச்சியில் இயங்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகம் மூலம் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, தேனி உள்பட பல இடங்களில் சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
சேலத்திலும், திண்டிவனத்திலும் தலா ஒரு தனியார் சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. நிகர்நிலை பல்கலைகழகங்களும் (Deemed to be universities) சட்டப்படிப்பை வழங்குகின்றனர். சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் நீதிபதி, வழக்கறிஞர் சட்ட ஆலோசகர் போன்ற பல்வேறு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தின் கீழ் சென்னை (தற்போது திருவள்ளூர் மாவட்டம், பட்டறைபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கம்), மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி மற்றும் இராமநாதபுரம், தேனியில் சட்டக்கல்லூரிகள் மற்றும் தனியார் சட்டக்கல்லூரியும் இயங்கி வருகின்றன.
மேலே உள்ள அனைத்து சட்டக்கல்லூரியிலும் பி.ஏ.+ எல்.எல்.பி., என்ற 5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப்படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.இந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பில் சேருவதற்கு 12ம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி ஆண்டும் 1411 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
அதே போல் அனைத்து சட்டக் கல்லூரியிலும் எல்.எல்.பி., என்ற 3 ஆண்டு இளநிலை சட்டப்படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்த 3 ஆண்டு இளநிலை சட்டப்படிப்பில் சேருவதற்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொருகல்வி ஆண்டும் 1541 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த 3 ஆண்டு இளநிலை சட்டப்படிப்பில் சேருவதற்கு வயது வரம்பு கிடையாது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் சட்டக்கல்லூரிகளில் சேருவதற்கு நுழைவு தேர்வு ஏதும் கிடையாது.
12ம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையில்தான் தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (Counselling) நடத்தப்படுகிறது. சட்டக்கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பப்படிவத்தை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திலும் மற்றும் அனைத்துசட்டக்கல்லூரிகளிலும் நேரில் அணுகி இந்தியன் வங்கி கட்டண செல்லான் பெற்று, விண்ணப்ப கட்டணத்தை வங்கியில் செலுத்தி, மேற்படி செல்லானின் பல்கலைகழக படிவத்தினை கொடுத்து விண்ணப்பம் வாங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ மாணவர்கள் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பபடிவத்துடன் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் அல்லது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல் எடுத்து, மேற்படி ஆவணங்களில் மாணவர்களின் கையெழுத்து செய்ய வேண்டும்.
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகம் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து மாணவர்களின் தரவரிசை பட்டியலை (Rank List) பல்கலைகழகம் தனதுஇணையதளமான www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடும். தரவரிசை பட்டியலின் (Rank List) அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக கலந்தாய்வு (Counselling) நடத்தப்படும்.
கலந்தாய்வில் (Counselling) கல்லூரி தேர்வு செய்யப்பட்டவுடன் ரூ.1620/- கலந்தாய்வு (Counselling) அறையில் இருக்கும் வங்கி கவுண்டரில் உடனடியாக செலுத்த வேண்டும். கலந்தாய்வு (Counselling) கடிதம் பெற்ற குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்ந்தெடுத்த சட்டக்கல்லூரிக்கு சென்று அட்மிஷன் பதிவு செய்து, சட்டக்கல்லூரியில் ரூ.1400/- கட்டணம் செலுத்த வேண்டும். சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒவ்வொரு செமஸ்டருக்கும் தலா ரூ.690/- கல்விக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
மத்திய சட்டக் கல்லூரி சேலம் (தனியார்)சேலம், மத்திய சட்டக் கல்லூரியில் பி.ஏ.,எல்.எல்.பி., என்ற 5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப்படிப்பும், எல்.எல்.பி., என்ற 3 ஆண்டு இளநிலை சட்டப்படிப்பும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த இளங்கலை சட்டப்படிப்பில் சேருவதற்கு 12ம் வகுப்பில் 45% மதிப்பெண்களுடனும், 3 ஆண்டு இளங்கலை சட்டப்படிப்பில் சேருவதற்கு பட்டப்படிப்பில் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்லூரி விண்ணப்ப படிவம் பெறுவதற்கு ரூ.500/- மதிப்பில் THE CENTRAL LAW COLLEGE என்ற பெயரில் DD எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் பதிவுக்கட்டணமாக ரூ.2,000/- மற்றும் அட்மிஷன் கட்டணமாக ரூ.3,000/- கல்லூரியில் சேரும் போது கட்டவேண்டும். ஒவ்வொரு கல்வி ஆண்டிக்கிற்கும் கல்விக் கட்டணமாக ரூ.80,000/- வரை வசூலிக்கப்படுகிறது.
LLB (Hons), 5 வருட ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு
தமிழகத்தில் சென்னை தரமணியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் ஸ்கூல் ஆப் எக்ஸலேன்ஸ் இன் லா (School of Excellence) என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பி.ஏ.,எல்.எல்.பி.,ஹானர்ஸ் (BA LLB Hons.)
பி.காம்.,எல்.எல்.பி.,ஹானர்ஸ் (B.Com., LLB Hons.)
பி.பி.ஏ.,எல்.எல்.பி.ஹானர்ஸ் (BBA LLB Hons.) மற்றும்
பி.சி.ஏ.,எல்.எல்.பி.,ஹானர்ஸ் (BCA LLB Hons.) என நான்கு விதமாக ஒருங்கிணைந்த 5 ஆண்டு இளநிலை சட்டப்படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த 5 ஆண்டு ஹானர்ஸ் (Hons.) இளநிலை சட்டப்படிப்பில் சேருவதற்கு 12ம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு கல்வி ஆண்டும்156 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். கல்விக்கட்டணம். இந்த 5 ஆண்டு ஹானர்ஸ் (Hons.)இளநிலை சட்டப்படிப்பில் சேருவதற்கு வயது வரம்பு கிடையாது. இந்த 5 ஆண்டு ஹானர்ஸ் (Hons.) இளநிலை சட்டப்படிப்பிற்கு ஒரு வருட கல்வி கட்டணமாக ரூ.87,635/- வசூலிக்கப்படுகிறது.
3வருடபட்டப்படிப்பு.இதே போல் எல்.எல்.பி.,ஹானர்ஸ் (Hons.) என 3 ஆண்டு ஹானர்ஸ் (Hons.) இளநிலை சட்டப்படிப்பு கற்றுக்கொடுக்கப்படுகிறது.இந்த 3 ஆண்டு ஹானர்ஸ் (Hons.) இளநிலை சட்டப்படிப்பில் சேருவதற்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஒவ்வொரு கல்வி ஆண்டும் 156 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த 3 ஆண்டு ஹானர்ஸ் (Hons.) இளநிலை சட்டப்படிப்பில் சேருவதற்கு வயது வரம்பு கிடையாது. கல்விக்கட்டணம்
இந்த 3 ஆண்டு ஹானர்ஸ் (Hons.)
இளநிலை சட்டப்படிப்பிற்கு ஒரு வருட கல்வி கட்டணமாக ரூ.87,135/- வசூலிக்கப்படுகிறது. CLAT என்ற சட்ட பொது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், தமிழ்நாட்டில், திருச்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைகழகத்தில் சேர்ந்து சட்டக்கல்வி பயிலலாம். இங்கு பி.ஏ.,எல்.எல்.பி.,ஹானர்ஸ் (Hons.) மற்றும் பி.காம்.,எல்.எல்.பி.,ஹானர்ஸ் (Hons.) என இரண்டு விதமாக ஒருங்கிணைந்த 5 ஆண்டு இளநிலை சட்டப்படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
மூன்று பிரிவுகளில் முதுநிலை சட்டப்படிப்பும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப்படிப்பில் சேருவதற்கு 12ம் வகுப்பில் 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CLAT என்ற சட்ட பொது நுழைவு தேர்வில் கலந்து கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி ஆண்டும் 120 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.ஒவ்வொரு கல்வி ஆண்டிக்கிற்கும் கல்விக் கட்டணமாக ரூ.2,23,000/- வரை வசூலிக்கப்படுகிறது.
முகவரி :
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைகழகம்
திண்டுக்கல் மெயின் ரோடு, நாவலுர் குட்டப்பட்டு
திருச்சிராப்பள்ளி - 620027.
போன் : 0431 - 2692108, 2692102, 2692105.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu