மைக்ரோ பைனான்ஸ்களின் பிடியில் மகளிர் குழுக்கள்: மீட்பாரா முதல்வர் ஸ்டாலின்? (EXCLUSIVE)
மகளிர் சுய உதவி குழு மாதிரி படம்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் பிடித்த, அவர் விரும்பி செயல்படுத்திய திட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கும் திட்டம். மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைப்பது, அவர்களுக்கு கால்நடைத்துறை, விவசாயத்துறை, கனரா வங்கி மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குவது, பயிற்சி பெற்ற மகளிருக்கு மகளிர் திட்டம் மூலம் தொழிற்கடன் வழங்குவது, அவர்கள் தொழில் செய்ய ஒத்துழைப்பு வழங்குவது என பல்வேறு திட்டங்களை அவர் செயல்படுத்தினார்.
தி.மு.க., ஆட்சி காலம் இருந்த வரை இந்த திட்டங்கள் சிறப்பாகவே செயல்பட்டன. முதல்வர் கருணாநிதி எங்கு ஆய்வுக்கு சென்றாலும், அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை பார்த்து அவர்களுடன் உரையாடுவதையும், அவர்களுக்கு உதவுவதையும் வழக்கமான பணிகளில் ஒன்றாகவே வைத்திருந்தார். ஆனால் அடுத்து வந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சிகாலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை கண்டு கொள்ளவே இல்லை. மகளிர் திட்டமும், மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகமும் செயல் இழந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி, மைக்ரோ பைனான்ஸ்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்களை கபளீகரம் செய்து விட்டன.
இன்றைய நிலையில் மைக்ரோன பைனான்ஸ்களில் கடன் வாங்காத மகளிர் சுயஉதவிக்குழுக்களே இல்லை என்ற நிலை மாநிலம் முழுவதும் உருவாகி விட்டது. வங்கிகளிலும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பெயரில் போலியாக பல லட்சம் கடன் வழங்கியதாக கணக்கு காட்டி அதனை வராக்கடன் பட்டியலில் சேர்த்து விட்டனர். (மாநிலம் முழுவதும் இந்த கடனை கணக்கிட்டால் அது மட்டும் பல ஆயிரம் கோடிகளை தாண்டும்) அதேபோல் கால்நடைத்துறை, விவசாயத்துறை, கனரா வங்கிகள் (அந்தந்த மாவட்டத்தில் உள்ள முன்னோடி வங்கிகள்) மூலம் அளிக்கப்பட்டு வந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டன.
பெயரளவிற்கே இந்த திட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மகளிர் அத்தனை பேரும் மைக்ரோ பைனான்ஸ்களில் சிக்கி தவிக்கின்றனர். மைக்ரோ பைனான்ஸ்கள் மகளிர்களின் கழுத்தை நெறித்து கடனை வசூலிக்கின்றனர். உதாரணத்திற்கு ஒரு மகளிருக்கு ரூ.60ஆயிரம் கடன் வழங்கினால், அவர் மீண்டும் கிட்டத்தட்ட ரூ.80ஆயிரம் வரை கட்டுவதாக கூறுகிறார். வேறு என்னங்க செய்யிறது? பொண்ணுக்கு கல்லூரி கட்டணம் செலுத்தியாக வேண்டும். வேற வழி தெரியாம இவங்க கிட்ட கடன் வாங்கறேன் என்கிறார் ஒரு கிராமத்துப் பெண்.
மாநிலம் முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண முதல்வர் ஸ்டாலின் மீ்ண்டும் தலையிட்டு தனது தந்தையின் கனவு திட்டத்தை முறையாக செயல்படுத்தி, மைக்ரோ பைனான்ஸ்களின் பிடியில் இருந்து மகளிர் சுய உதவிக்குழுக்களை மீட்க வேண்டும் என மகளிர் குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu