விருதுநகர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு விரைந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு: ஆட்சியர்.

விருதுநகர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு விரைந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு: ஆட்சியர்.
X

கருப்பு பூஞ்சை மாதிரி படம்

மாவட்டத்தில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு, விரைவில் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் ஆட்சியர் கண்ணன் கூறும்போது, விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையில், இதுவரை 19 ஆயிரத்து 342 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முற்றிலும் குணமடைந்துவிட்டனர்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மாவட்டத்தில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 64 ஆயிரத்து 902 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு ஏற்பட்ட 2 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும், ஒருவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருப்பு பூஞ்சை நோய்க்கு தேவையான மருத்துவ உதவிகள், மாநில சுகாதாரத்துறையிடம் கேட்கப்பட்டுள்ளது.

விரைவில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகள் விருதுநகருக்கு வர இருக்கிறது. கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு, இங்கேயே சிகிச்சைகள் வழங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து வரும் மருத்துவக் கழிவுகள், மூன்று நாட்களுக்கு ஒருமுறை அகற்றப்பட்டு வந்தது. இனி மருத்துவக்கழிவுகளை தினமும் அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் கண்ணன் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!