விருதுநகர் அருகே இரண்டு பேர் வெட்டிக் கொலை: 3 பேர் நீதிமன்றத்தில் சரண்
இரட்டைக் கொலை சம்பவம் நடந்த இடத்தை மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்
அருப்புக்கோட்டை அருகே 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பகுதியில் உள்ள காந்தி நகர் அருகே, சபரி மற்றும் அவரது உறவினர் ரத்தினவேல்பாண்டியன் இருவரும் நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். நேற்று காலை அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலை சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக சம்பவ இடத்தை மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், திருச்சுழி அருகேயுள்ள உடையனம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராக்கம்மாள்(52), கடந்த மார்ச் மாதம், குடும்பப் பிரச்சினை காரணமாக உறவினர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருச்சுழி போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சபரி (36) ஜாமீனில், சிறையிலிருந்து வெளியே வந்திருந்தார். தனது உறவினரான ரத்தினவேல்பாண்டியன் (32) என்பவரது வீட்டில் தங்கியிருந்தார். இவர்கள் இருவரும் தான் நேற்று முன்தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பழிக்குப்பழி நடவடிக்கையாக இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் உடையனம்பட்டியைச் சேர்ந்த சந்தனமகாலிங்கம், கருப்பையா, பெரியசாமி, இவரது சகோதரர் குருசாமி,சிவகாசி பகுதியைச் சேர்ந்த கருப்பையா ஆகிய 5 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஏற்கெனவே கொலையான ராக்கம்மாளின் மகன்கள் ஜெயப்பிரகாஷ் (23), சூரியபிரகாஷ் (21), இவர்களது உறவினர் முகேஷ்குமார் (37) ஆகிய 3 பேரும் நேற்று, மதுரை 6 வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் 5 பேரை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட 2 தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu