அருப்புக்கோட்டை அருகே ஆசிரியர் தம்பதியினர் கொலை

அருப்புக்கோட்டை அருகே ஆசிரியர் தம்பதியினர் கொலை
X

அருப்புக்கோட்டையில்  கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்

அருப்புக்கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் வடக்கு 2 வது தெருவைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (71). இவரது மனைவி ஜோதிமணி(65). கணவன் மனைவி இருவரும் ஆசிரியர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களது மகன் சதீஸ், சென்னையில் பணிபுரிந்து வருகிறார். அருப்புக்கோட்டையில் கணவன், மனைவி இரண்டு பேரும் தனியாக வசித்து வந்தனர்.

சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணியை அவரது உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை சங்கரபாண்டியன் உறவினர் ஒருவர், அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சங்கரபாண்டியனும், அவரது மனைவி ஜோதிமணியும் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் ஆசிரிய தம்பதி இறந்து கிடந்த வீட்டிற்குள் தடயங்களை சேகரித்தனர். வீட்டின் பீரோ திறந்து கிடந்துள்ளது, வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடந்ததுடன் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்தது. இதனால் பணம், நகையை கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்டு இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இருவரது சடலங்களும், உடற்கூராய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!