காரியாபட்டி அருகே துணை மின் நிலையம் அமைக்க அமைச்சர் அடிக்கல்..!

காரியாபட்டி அருகே துணை மின் நிலையம் அமைக்க   அமைச்சர் அடிக்கல்..!
X

துணை மின்நிலைய ட்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு 

பெண்கள் வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் ஒளிவிளக்கினை ஏற்றிய பெருமை திராவிட மாடல் அரசையே சாரும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்.

பெண்கள் வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் ஒளிவிளக்கினை ஏற்றிய பெருமை திராவிட மாடல் அரசையே சாரும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்.

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், முடுக்கன்குளம் கிராமத்தில் புதிதாக அமையவுள்ள துணை மின் நிலைய அடிக்கல் நாட்டு விழாவை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார். இதன் மூலம் முடுக்கன்குளம், எஸ். மறைக்குளம், பனைக்குடி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய, அமைச்சர் தங்கம் தென்னரசு, முடுக்கன்குளத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஏனெனில் இப்பகுதி முழுவதும் கிராமங்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதியாகும். குறிப்பாக விவசாயம் செழித்து இருக்கக்கூடிய இப்பகுதியில் துணை மின் நிலையம் அமைவதால் குறைந்த மின்னழுத்தினால் ஏற்படும் மின்தடையின்றி முழுநேரம் மின்சாரம் கிடைக்கும்.

இந்தப் பகுதிக்கு திருச்சுழி, நரிக்குடி, புல்வாய்கரை பகுதிகளிலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தூரம் காரணமாக சில நேரங்களில் முழுமையான மின்சாரம் பெறமுடியாது. இதனால் தண்ணீர் பெற முடியாமல் விவசாய பெருமக்கள் பாதிப்படைந்தனர், தற்போது அருகாமையில் துணை மின் நிலையம் அமைவதினால் சிக்கல் இருக்காது. கடந்த காலங்களில் மின் வழித்தடப்பாதையில் பிரச்சனை ஏற்பட்டால் மாற்றுப்பாதையில் மின்சார விநியோகம் செய்வதற்கான வழிகள் இல்லை. அதுவும் இதன்முலம் களையப்படும்.

இப்பிரச்சனை குறித்து நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருந்தபோதே அப்போதைய மின்துறை அமைச்சரிடம் எங்கள் பகுதியில் இது போன்ற சிரமம் இருக்கிறது என்பதை எடுத்துரைத்தேன். அதன்பின்னர், நான் மின்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது முடுக்கன்குளத்தில் துணை மின் நிலையம் அமைவதன் அவசியம் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறினேன். கிராமங்களுக்கான அடிப்படை வசதிகள் அத்தனையும் உறுதி செய்திடும் முதல்வர் நமக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். அதையடுத்து இதனைக் கட்டமைக்க நிதி அமைச்சரான நான் 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தேன்.

இதுமட்டுமல்ல பெண்கள் வாழ்வில் ஒவ்வொரு படிநிலையிலும் திராவிட மாடல் அரசு துணை நிற்கிறது. கட்டணமில்லாமல் பெண்கள் பயணிக்க விடியல் பயணம், பொருளாதார ரீதியாகப் பிறரை சாராமல் இருக்க மகளிர் உரிமைத்தொகை திட்டம், உயர்கல்வி பெறுவதற்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் என ஒவ்வொரு குடும்பத்திலும் ஒளிவிளக்கினை ஏற்றிய பெருமை திராவிட மாடல் அரசையே சாரும். இன்று அடிக்கல் நாட்டப்படும் துணை மின் நிலையம் காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் பயன்பாட்டிற்கு வருவதினை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் இம்மக்கள் முழுமையாகப் பயனடைவார்கள் எனக் கூறினார்.

இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், நெல்லை மண்டல தலைமைப்பொறியாளர் செல்வராஜ், விருதுநகர் மேற்பார்வை பொறியாளர்கள் பிரேமலதா, முடுக்கன்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி குப்புசாமி, திருச்சுழி ஊராட்சி மன்ற பெருந்தலைவர் பொன்னுத்தம்பி, நரிக்குடி ஊராட்சி மன்ற பெருந்தலைவர் காளீஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தமிழ்வாணன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மின்வாரிய உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!