அருப்புக்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
X

அருப்புக்கோட்டையில் கூடுதல் நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  வழக்கறிஞர் சங்கத்தினர்

அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும் என்று கடந்த 2021 ம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது

அருப்புக்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக் கோரி, வழக்கறிஞர்கள் கவன ஈர்ப்பு பேரணியாகச்சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என நான்கு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நீதிமன்றங்களில் முடிவு பெறும் வழக்குகளும், திருச்சுழி குற்றவியல் நீதிமன்றத்தில் முடிவு பெறும் வழக்குகளும், திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்வதற்காக செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
வழக்கறிஞர்கள் கோரிக்கையையடுத்து, அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும். நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதி மற்றும் நீதிமன்றத்திற்கான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கடந்த 2021ம் ஆண்டு அரசிதழ் வெளியிடப்பட்டது. ஆனால் அரசிதழ் வெளியிடப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைப்பதற்கான எந்தவிதப் பணிகளும் நடைபெறவில்லை.
அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் சிரமத்தை தவிர்ப்பதற்காக, உடனடியாக இந்தப் பகுதியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி, அருப்புக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னிட்டு வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். கவன ஈர்ப்பு பேரணி அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்டு அகமுடையார் மஹால், கடை வீதி, சிவன் கோவில் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், மதுரை சாலை உள்ளிட்ட பகுதிகளின் வழியாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முடிவடைந்தது. பின்னர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story