அருப்புக்கோட்டையில் பலத்த மழை!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை, அருப்புக்கோட்டை பகுதியில் திடீரென்று கருகருவென்று மேகங்கள் திரண்டு வந்தன. சற்று நேரத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்யத் துவங்கியது.
புளியம்பட்டி, காந்திநகர், ஆத்திப்பட்டி வேலாயுதபுரம், பாளையம்பட்டி, ராமசாமிபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழையால் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் காற்று, மழையால் புரட்டிப் போடப்பட்டதைப் போலானது. நகரின் பல இடங்களில் மின்சார டிரான்ஸ்பார்மார்கள், மின் கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்து விழுந்தன.
புளியம்பட்டி, வேலாயுதபுரம், நெசவாளர் காலனி, ஆத்திப்பட்டி, காந்திநகர், விருதுநகர் சாலை, மதுரை சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பாளையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பலத்த மழை காரணமாக நகரின் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமமடைந்தனர்.
தொடர் மழை காரணமாக சாலைகள், தெருப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து நின்றதாலும், ஆங்காங்கே மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். அருப்புக்கோட்டை பகுதியில் பல ஆண்டுகளுக்கு பின்பு இது போன்று பலத்த மழை பெய்துள்ளது என்று பொதுமக்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu