காரியாபட்டியில் பல்நோக்கு மருத்துவ முகாம்: நிதி அமைச்சர் தொடக்கம்

காரியாபட்டியில் பல்நோக்கு மருத்துவ முகாம்: நிதி அமைச்சர் தொடக்கம்
X

காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளியில் இலவச பன்னோக்கு மருத்துவமுகாமை தொடக்கி வைத்த தங்கம்தென்னரசு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளியில் இலவச பன்னோக்கு மருத்துவமுகாமை தொடக்கி வைத்த தங்கம்தென்னரசு

விருதுநகர் மாவட்டம், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளியில் இன்று(24.06.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழரிஞர் டாக்டர் கலைஞர், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவிகுமார் தலைமையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர், முகாமில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனைகள், சிறப்பு ஆலோசனை, சிறப்பு சிகிச்சைகளை பார்வையிட்டார்.மேலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் மகப்பேறு திட்டத்தின் கீழ் 10 தாய்மார்களுக்கு தாய், சேய் நலப்பெட்டகம் மற்றும் சித்த மருத்துவத்தின் சஞ்சீவி பெட்டகங்களையும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்களையும், 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளையும் அமைச்சர் தங்கம்மூர்த்தி வழங்கினார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது நினைவை போற்றக்கூடிய வகையில் இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சிறப்பான ஒரு மருத்துவ கட்டமைப்பை உருவாக்கித் தந்ததில் முத்தமிழறிஞர் கலைஞரின் பங்கு மிக முக்கியமானதாகும். முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் மருத்துவத்துறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

ஒரு நாடு வளம் பெற வேண்டும் என்றால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும். கல்வி தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேறி இருந்தாலும், அதற்கு அடிப்படையாக இருப்பது உடல் ஆரோக்கியம் தான். ஆரோக்கியமாக இருப்பதற்கு நோய் வருவதற்கு முன் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க கூடிய அளவிற்கு உட்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும்.

அதனை கருத்தில் கொண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் , கண்ணொளி திட்டம் தொழு நோய்க்கான சிகிச்சை திட்டம், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் உயர் சிகிச்சை பெறக்கூடிய கலைஞர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற மருத்துவ திட்டங்களை செயல்படுத்தினார்கள்.

அந்த வழியில் தமிழ்நாடு முதலமைச்சர், மருத்துவ துறையை மேலும் வலு சேர்க்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். ஒரு காலத்தில் பொதுமக்கள் மருத்துவமனையை தேடிச் சென்ற நிலை மாறி தற்போது, மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மூலம் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு சென்று, மருத்துவ உதவிகள் வழங்கப் பட்டு வருகின்றன. அதுபோல இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும் 48 திட்டம் உள்ளிட்ட உயிர் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்திலும், மருத்துவ கட்டமைப்பு மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், கண்,காது மூக்கு, தொண்டை மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படுகிறது.

மேலும், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இசிஜி, எக்கோ, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும்;, ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைக்கான ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, இந்த நல்ல திட்டத்தின் மூலம் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு, அனைவரும் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று அமைச்சர் தங்கம் மூர்த்தி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.முருகவேல், துணைஇயக்குநர்(குடும்பநலம்) மரு.கௌசல்யா, காரியாபட்டி பேரூராட்சித்தலைவர் செந்தில், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் முத்துமாரி (காரியாபட்டி) பொன்னுத்தம்பி(திருச்சுழி), மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்க தமிழ்வாணன், முக்கிய பிரமுகர்கள் கண்ணன், செல்லம் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!