பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பு
சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ள காட்சி.
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவள்ளூர் நகர் அருகே உள்ளது மதுரை வீரன் காலனி, பாபுஜி நகர். இந்த பகுதிகளில் மழை பெய்தால் மழைநீர் வெளியே செல்வதற்காக இருந்த ஓடைகளை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். பருவமழை காலங்களில் மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் குடியிருப்புகளை சூழ்ந்துவிடுவது வழக்கமாக உள்ளது. இதனால் அவதி பட்டு வரும் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
திங்கட்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் ஓடியது. பாபுஜி நகர் வழியாக செல்லக்கூடிய மழைநீர் அங்கு செல்ல வழி இல்லாமல் மதுரை வீரன் காலனி பகுதியில் சென்றதால் அங்குள்ள 40 வீடுகளை மழை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதிமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், வீட்டுக்குள் செல்ல முடியாமலும் முடங்கி கிடக்கின்றனர். வீடுகளுக்குள் செல்ல வேண்டும் என்றால் முட்டு அளவு தண்ணீரில் நடந்து தான் செல்கின்றனர். பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விட்டது. இதனால் பல வீடுகளின் மண் சுவர்கள் இடிந்து விழுந்து விட்டன. மழை நீர் உள்ளே புகுந்ததால் வீட்டில் உள்ளே குடியிருக்க முடியாமல் அருகே உள்ள பள்ளிக்கூடத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ராஜபாளையம் வட்டாட்சியர் மற்றும் ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டனர். தற்காலிகமாக தண்ணீர் வெளியே செல்வதற்காக அந்த பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருந்த வீடுகள், கடைகளின் சுவர்களை ஜேசிபி எந்திரத்தின் மூலம் இடித்து தள்ளினார்கள். இதன் பின்னரே இந்த பகுதியில் தேங்கி இருந் மழை தண்ணீர் வெளியேறி சென்றது. மேலும் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர்கள். இரவு நேரம் என்பதால் தண்ணீரை முழுவதுமாக வெளியேற்ற முடியவில்லை. அதனால் அடுத்த நாளிலும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மழைநீர் வெளியேறி செல்ல நிரந்தரமாக வாய்க்கால் அமைத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். மாவட்ட நிர்வாகத்திடமும், பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் இது பற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலப்பட்ட கரிசல் குளம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட இந்த பகுதியில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக தவித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu