திண்டிவனம் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் 9 பேர் காயம்

திண்டிவனம் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் 9 பேர் காயம்
X

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 9 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லாரி-கார் மோதல்: 5 பேர் காயம்:

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துபட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கார் ஓட்டுநர். இவர் தனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த ஆண்டாள் (75), அவரது மகள்களான திலகவதி, பத்மாவதி, பேத்தி காந்தமி ஆகியோருடன் காரில் புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது திண்டிவனத்தை அடுத்த மொளசூர் அருகே வரும் போது முன்னால் சென்ற லாரியின் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால், லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் சென்ற 5 பேரும் பலத்த காயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆண்டாள் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கிளியனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம்:

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், அண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். ஆட்டோ டிரைவரான இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நாகேந்திரன் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் சென்னைக்கு தனது மனைவி சாந்தி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆட்டோவில் சென்று கொண்டி ருந்தார்.

திண்டிவனத்தை அடுத்த சாரம் அருகே ஆட்டோ சென்றுக் கொண்டிருக்கும்போது, முன்னால் சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க நாகேந்திரன் பிரேக் பிடித்ததால் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேரும் காயமடைந்தனர்.

அவர்கள் 4 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும், பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் நாகேந்திரன் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அருகே இருவேறு விபத்தில் 9 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக கண்காணிப்பு தேவை:

திண்டிவனம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெற்று வருவது வழக்கமாக உள்ளது. இதற்கு காரணம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக வாகனங்கள் அதிகமாக செல்வதால் இது மாதிரியான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் பகுதியில் உள்ள சாலைகளை காவல்துறை கண்காணித்து அதிவேக வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில் அபராதங்கள் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!